பீஷான், தெம்பனிஸ் உட்பட மேலும் ஆறு பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்

பீஷான், தெம்பனிஸ் உட்பட மேலும் ஆறு பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்

2 mins read
a59279ce-3b4f-4f8e-97f7-7f38b60ed388
ஓவியரின் கைவண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
Google News Preferred Icon

பீஷான், தெம்பனிஸ் உள்ளிட்ட மேலும் ஆறு பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் 2027ஆம் ஆண்டுமுதல் புதுப்பிக்கப்படவுள்ளன. பொதுப் போக்குவரத்தை மேலும் வசதியானதாகவும் குடும்பங்களுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றதாகவும் மாற்றுவதற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்தது.

பேருந்துச் சேவைகளுக்கு ஏற்படும் இடையூறைக் குறைக்க புதுப்பிப்புப் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

பீஷான், புக்கிட் பாத்தோக், புக்கிட் மேரா, யூனோஸ், பொங்கோல், தெம்பனிஸ் ஆகிய ஆறு பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் இவற்றில் அடங்கும்.

ஓவியரின் கைவண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட புக்கிட் பாத்தோக் பேருந்துச் சந்திப்பு நிலையம்.
ஓவியரின் கைவண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட புக்கிட் பாத்தோக் பேருந்துச் சந்திப்பு நிலையம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

குளிரூட்டி, காற்றோட்டம், ஒளி அமைப்புகள் போன்றவை எரிசக்திச் சிக்கனத்துடனும் பயணிகளுக்கு வசதியாக அமையும் வகையிலும் மாற்றப்படும்.

ஓவியரின் கைவண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட புக்கிட் மேரா பேருந்துச் சந்திப்பு நிலையம்.
ஓவியரின் கைவண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட புக்கிட் மேரா பேருந்துச் சந்திப்பு நிலையம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

மேலும், குழந்தைப் பராமரிப்பு அறை, தொடு உணர்வு தரைக்கற்கள், கைப்பிடிகளில் பிரெய்லி (Braille) எழுத்துகள், முன்னுரிமை வரிசைப் பகுதிகள் போன்றவை மேம்படுத்தப்படும்.

முதியோர், கர்ப்பிணிகள், சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், தள்ளுவண்டியில் குழந்தை வைத்திருப்போர் பேருந்தில் ஏறுவதற்கான இடத்துக்கு அருகே காத்திருக்க முன்னுரிமை வரிசைப் பகுதிகள் உதவும். பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் முன்கள ஊழியர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்கும் வகையில் பயணிகள் சேவை அலுவலகங்கள், ஊழியர் ஓய்வறைகள் போன்றவையும் புதுப்பிக்கப்படும்.

மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது பயணிகள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக்கொள்வர் எனத் தாம் நம்புவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறினார்.

“இதன்மூலம், எதிர்காலத்திலும் தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வசதிகளை அவர்கள் எதிர்பார்க்க முடியும்,” என்றார் அவர்.

அங் மோ கியோ, பிடோக், பூன் லே, கிளமெண்டி, செங்காங், சிராங்கூன், தோ பாயோ ஆகிய ஏழு வட்டாரங்களில் உள்ள பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் ஏற்கெனவே புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய $105 மில்லியன் செலவில் 2024 ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்ட இப்பணிகள் 2027க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
பேருந்து நிலையம்பேருந்துச் சந்திப்பு நிலையம்தெம்பனிஸ்