உரிமமின்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய அறுவர் பிடிபட்டனர்

உரிமமின்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய அறுவர் பிடிபட்டனர்

அட்மிரால்டி ரோடு வெஸ்ட்டில் பிடிபட்டனர்
படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

23 Jul 2026 - 3:51 pm

1 mins read

தகுந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்புறுதி இல்லாமலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 15ஆம் தேதி அட்மிரால்டி ரோடு வெஸ்ட்டில் பல அமைப்புகள் ஈடுபட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்கள் 23லிருந்து 49 வயதுக்கு உட்பட்டவர்கள். சோதனைகளுக்காக வழியில் நிறுத்தப்பட்ட 300க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளோட்டிகளில் அவர்களும் அடங்குவர்.

போக்குவரத்துக் காவல்துறை, தேசியச் சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய மூன்றும் சேர்ந்து அந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.

ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக மேலும் இருவர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவருக்கு 30 வயது, மற்றொருவருக்கு 45 வயது. காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 23) அறிக்கை மூலம் இந்தத் தகவல்களை வெளியிட்டது.

வாகனங்களின் வாயு வெளியாவது, வாகனங்களிலிருந்து அளவுக்கதிகமான சத்தம் வெளியாவது ஆகிய காரணங்களுக்காக தேசியச் சுற்றுப்புற வாரியம் 31 பேருக்கு உத்தரவாணை பிறப்பித்தது.

மேலும், வாகனப் பதிவு எண்ணைச் சரியாகப் பொருத்தாதது, சாலை வரியைச் சரிவரச் செலுத்தாதது போன்ற 35 குற்றங்களையும் வாரியம் அடையாளம் கண்டது. தகுந்த வாகன நுழைவு உரிமம் இல்லாமல் சிங்கப்பூருக்குள் வர முயன்ற வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாரியம் பறிமுதல் செய்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காவல்துறைநிலப் போக்குவரத்து ஆணையம்தேசிய சுற்றுப்புற வாரியம்