ஈசூனில் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) மூன்று பொதுப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆறு பயணிகள் காயமடைந்தனர்.
பேருந்து நிறுவனமான ‘டவர் டிரான்சிட் சிங்கப்பூர்’, தனது ஃபேஸ்புக் பதிவில், பிற்பகல் 3.05 மணியளவில் ஈசூன் அவென்யூ 2ல் உள்ள புளோக் 790க்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் 853ஆம் எண் பேருந்து, 852ஆம் எண் பேருந்தின் பின்புறத்தில் மோதியதாகவும் இதனால் ஏற்பட்ட தொடர் மோதலில் 851ஆம் எண் பேருந்தும் சிக்கிக்கொண்டதாகவும் ‘டவர் டிரான்சிட்’ குறிப்பிட்டுள்ளது.
852, 851 ஆகிய சேவைகளை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்குகிறது.
சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்குத் தங்கள் குழுவினர் உதவி வழங்கி வருவதாக டவர் டிரான்சிட் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து பிற்பகல் சுமார் 3.05 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மூன்று பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இருவர் சிறிய காயங்களுக்காகப் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மாலை 4.55 மணிக்கு வழங்கிய கூடுதல் தகவலில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மூவரையும் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான கவனிப்பையும் ஆதரவையும் வழங்க முயற்சிப்பதாக ‘டவர் டிரான்சிட்’ நிறுவனம் தெரிவித்தது.
“இதன் காரணமாக அவர்களுக்கும், சாலையைப் பயன்படுத்தும் பிறருக்கும் ஏற்பட்ட மனவேதனைக்கும் சிரமத்திற்கும் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என்று அது தெரிவித்தது.
விசாரணைக்கு உதவும் வகையில், போக்குவரத்து காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.
