கேலாங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) நடந்த ஆறு வாகன விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஐந்து கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
மாலை கிட்டத்தட்ட 6 மணியளவில், சிம்ஸ் டிரைவ் (Sims Drive) நோக்கிச் செல்லும் கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல், கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2 ஆகிய சாலைகளின் சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
67 வயது கார் ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
‘த்ரெட்ஸ்’ என்ற சமூக ஊடகத் தளத்தில் பகிரப்பட்ட விபத்திற்குப் பின்னர் பதிவான நிழற்படம் ஒன்றில், சாலையின் மூன்று தடங்களும் முடக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
அந்தப் புகைப்படத்தில் சாலையின் வலக்கோடித் தடத்தின் ஓரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாய்ந்து கிடப்பது தெரிகிறது.
அத்துடன், சாலையின் மூன்று தடங்களிலும் வெவ்வேறு அளவிலான சேதங்களுடன் மூன்று கார்கள் நிற்பதைக் காண முடிகிறது. அவற்றில் இரு கார்கள் சாலையின் எதிர்த்திசையை நோக்கி நிற்பது போலப் படங்களில் காணப்பட்டது.
சம்பவ இடத்தில் மருத்துவ உதவி வாகனம் ஒன்றும் இருந்தது.
‘ஷியாவோஹோங்ஷூ’ (Xiaohongshu) தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களில், சாலையின் இடத்தடத்தில் உள்ள கார் கடுமையாகச் சேதமடைந்து, அதன் பின்புற வலது சக்கரம் முற்றிலும் நசுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.
அதே கார் ஒரு மின்கம்பத்தில் மோதியது மற்றொரு புகைப்படத்தில் தென்பட்டது. விசாரணை தொடர்கிறது.


