ஈசூன், ஸ்பிரிங்லீஃப் வட்டாரங்களில் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு புதன்கிழமை (நவம்பர் 25) நடத்திய திடீர்ச் சோதனையில், சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண்கள் 30 வயதிற்கும் 47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனக் காவல்துறை தெரிவித்தது. மாதர் சாசனம் 1961ன்கீழ் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடற்பிடிப்பு நிலையங்கள் சட்டம் 2017, உடற்பிடிப்பு நிலையங்கள் விதிமுறைகள் 2018 ஆகியவற்றின்கீழ் 24, 66 வயதுடைய ஆடவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
முதல் சோதனை, ஈசூனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் காலை வேளையில் நடந்தது. அச்சோதனையில் நான்கு பெண்கள் கைதானதாக தமிழ் முரசு அறிகிறது.
இரண்டாவது சோதனை இரவு 9.59 மணிக்கு ஸ்ப்ரிங்லீஃப் வட்டாரத்திலுள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் நடத்தப்பட்டது.
இரவு 11.19 மணிக்கு முடிவடைந்த சோதனையில் இரு பெண்கள் கைதாகினர்.
உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவின் செயல்பாட்டுத் தலைவர் ஸெங் ருயிலின், சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது என்று எச்சரித்தார்.
“சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவர்,” என்றார் அவர்.
பாலியல் நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்க முன்வந்த பொதுமக்கள், குற்றத்தை எதிர்க்க முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். சமூகத்தினர் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்தகைய நடவடிக்கைகளை முடக்க தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கண்காணிப்பாளர் ஸெங் உறுதியளித்தார்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
