பாதுகாப்பு உளவுத்துறைப் பிரிவின் 60ஆம் ஆண்டுநிறைவு: அதிகாரிகளின் பங்களிப்புக்கு அங்கீகாரம்

பாதுகாப்பு உளவுத்துறைப் பிரிவின் 60ஆம் ஆண்டுநிறைவு: அதிகாரிகளின் பங்களிப்புக்கு அங்கீகாரம்

3 mins read
7bc3ee2b-9108-48b8-9752-ad30a6f48908
பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவு தனது 60வது ஆண்டுநிறைவை ஒட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) தனிப்பட்ட நினைவுகூரும் நிகழ்ச்சியை நடத்தியது. இது குறிப்பிட்ட குழுவினரைத் தவிர பொதுமக்களுக்கோ மற்றவர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.

‘நமது பணி, நமது கதைகள், நமது மக்கள்’ எனும் கருப்பொருளில் அமைந்த அந்நிகழ்ச்சி, அமைப்பின் முன்னாள், இந்நாள் அதிகாரிகளின் பங்களிப்புகளைக் கெளரவித்ததோடு அரசாங்கத்துக்கு முக்கியமான உளவுத் தகவல்களை தொடர்ந்து வழங்குவதற்கான தனது கடப்பாட்டையும் மறு உறுதிப்படுத்தியது.

பிரதமர் லாரன்ஸ் வோங் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம், தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், பிரதமர் அலுவலக மூத்த ஆலோசகர் டியோ சி ஹியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

“கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பெற்ற முக்கியத் தருணங்களில் பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவு பங்காற்றியுள்ளது. இவற்றில் பல, பொதுப் பதிவுகளில் இடம்பெறாமல் போயிருக்கலாம், ஆனால் அவை அனைத்தின் மூலமாகவே சிங்கப்பூரின் பாதுகாப்பு கட்டிக்காக்கப்பட்டுள்ளது. தலைமுறைகளாகச் சிங்கப்பூர்த் தலைவர்கள் உலகைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறியவும் இந்தப் பிரிவு உதவியுள்ளது,” என்று பிரதமர் வோங் தமது உரையில் தெரிவித்தார்.

முன்னாள் இயக்குநர்களான தே சியாவ் ஹுவா, எஸ்.ஆர். நாதன், எடி தியோ ஆகிய முன்னோடித் தலைவர்களின் சேவைக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

எதிர்காலம் குறித்துப் பேசிய பிரதமர் வோங், வெளிப்புறச் சூழல் மாறிவருவதால் பிரிவின் பணி மேலும் சவால்மிக்கதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறும் என்றார். 

“சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவு தனது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். நாடுகள் அரசியல் ரீதியாக என்ன சொல்கின்றன, என்ன செய்கின்றன என்பதை மட்டுமல்லாமல், அவற்றின் பொருளியல், தொழில்நுட்பச் சூழல்களையும் புரிந்துகொண்டு எவ்விதச் சவாலையும் எதிர்கொள்ள சிங்கப்பூரைத் தயாராக வைத்திருக்க உதவ வேண்டும்,” என்று அவர் ஊக்கப்படுத்தினார்.

அமைப்பின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அதன் பணியாளர்களே என்பதைப் பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார். திறமைக்கு அப்பாற்பட்டு, நேர்மையும் துணிச்சலும் கொண்டவர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 “பல்வேறு தகவல்களைத் திரட்டி, மனித அறிவாற்றலைப் பயன்படுத்தி உண்மையை கண்டறிவதே அமைப்பின் பணி. இதுவே தேசியப் பாதுகாப்பு தொடர்பாக தலைவர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாங்கள் செய்யும் பணிகள் பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாமல் இருந்தாலும், இதுவரை எங்களால் தவிர்க்கப்பட்ட நெருக்கடிகளே எங்களது வெற்றிக்குச் சான்றுகள்,” என்று பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவின் முன்னாள் இயக்குநர் எடி தியோ கூறினார்.

“பிரிவின் வலிமைக்கும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் அதன் பணியாளர்களின் தரமும் அர்ப்பணிப்புமே முக்கியக் காரணம். இங்குப் பணியாற்றுவது வேலை மட்டுமன்று; அதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம்,” என்றார் ஓய்வுபெற்ற முன்னாள் பணியாளர் தலைமை அதிகாரி கெவின் சாண்டா மரியா.

நேர்மை, துணிச்சல் போன்ற பண்புகளைக் கொண்ட சிங்கப்பூரர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் நோக்கில், பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவு தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தையும் லிங்க்ட்இன் பக்கத்தையும் தொடங்கியுள்ளது. பிரிவைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கவும் அதில் சேர்ந்து பங்களிக்க சிங்கப்பூரர்களை ஈர்க்கவும் அத்தளங்கள் உதவும்.

குறிப்புச் சொற்கள்