ஹவ்காங்குக்கு இடம் மாறும் எஸ்ஜேஐ

ஹவ்காங்குக்கு இடம் மாறும் எஸ்ஜேஐ

2 mins read
906d787a-dbfc-462c-9a8c-f9d935282fc3
ஈராண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இப்படத்தில் எஸ்ஜேஐ இன்டர்நே‌ஷனல் பள்ளி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயின்ட் ஜோசஃப்ஸ் இன்ஸ்டிடியூ‌ஷன் அனைத்துலகப் (எஸ்ஜேஐ இன்டர்நே‌ஷனல்) பள்ளி 2030ஆம் ஆண்டு ஹவ்காங்குக்கு இடம் மாறவுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இப்பள்ளி தாம்சன் ரோட்டில் இயங்கிவருகிறது. 1033 அப்பர் சிராங்கூன் ரோட்டுக்கு இடம் மாறுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிவருவதாக எஸ்ஜேஐ செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

இடம் மாற்றம் குறித்து எஸ்ஜேஐ கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி பெற்றோருக்குக் கடிதம் அனுப்பியது.

தற்போது அது 490 தாம்சன் ரோட்டில் உள்ளது. 2007ஆம் ஆண்டு அவ்விடத்தில் பள்ளி திறக்கப்பட்டது.

ஹவ்காங்கில் எஸ்ஜேஐ அமையவிருக்கும் இடத்தில் தற்போது ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி அங்கு இடம் மாறியது.

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹவ்காங்கிலிருந்து இடம் மாறும். அது, அங் மோ கியோவில் உள்ள அதன் நிரந்தர வளாகத்துக்கே செல்லவிருக்கிறது.

ஆண்டர்சனின் அங் மோ கியோ வளாகத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எஸ்ஜேஐ தாம்சனில் செயல்பட வகைசெய்யும் ஒப்பந்தம் 2030ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவதாக நகர மறுசீரமைப்பு ஆணையப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார். அவ்விடம், 2014 பெருந்திட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து குடியிருப்புப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை எந்த வகையான வீடமைப்புத் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம் என்பதுகுறித்து நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆலோசித்துவருவதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இடம் மாற்றம் குறித்து பெற்றோரைத் தாங்கள் தொடர்புகொள்ள எண்ணம் கொண்டிருப்பதாக எஸ்ஜேஐ இன்டர்நே‌ஷனல் அதன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆண்டர்சன்பள்ளிதொடக்கக் கல்லூரிகல்வி