இம்மாதத்திலிருந்து சமுதாய, குடும்ப, மேம்பாட்டு அமைச்சில் முன்களப் பணியாளர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த தொடர்கல்வியும் பயிற்சி திட்டங்களும் வழியமைத்துத் தரும்.
அடிப்படைத் திறன்களான சிந்தனைப் பயிற்சி, பண்பாட்டுத் திறன்கள் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள அத்திட்டங்கள் அதிகாரிகளுக்குக் கைகொடுக்கும்.
மேலும், குடும்பச் சிக்கல் தலையீட்டுத் திறன் பயிற்சி, சமூகநலக் கொள்கைகள் போன்றவற்றின் மூலம் அதிகாரிகள் தங்களின் சமூகப் பணி கோட்பாடுகளுக்குப் பயன்படுத்த அவை ஏதுவாக அமையும்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று இத்திட்டங்கள் தொடங்கும். இந்தத் தொடர்கல்வி, பயிற்சித் திட்டங்கள்மூலம் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 250 அதிகாரிகள் பயன்பெறுவர்
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய சமூகப் பணி, சமூக வளர்ச்சிப் பள்ளித் திறப்புவிழா வியாழக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்றது.
அதில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
புதிய பள்ளி, பல்கலைக்கழகத்தின் ஆறாவது பள்ளியாகும். சிங்கப்பூரின் சமூகப் பணித் துறையை வலுவாக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேவையான 2,000 சமூக பணியாளர்களைத் தயார்செய்யவும் இந்தப் புதிய பள்ளி துணைபுரியும்.
திறப்புவிழாவில் கல்வி அமைச்சரும், சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மூப்படையும் மக்கள்தொகை, பெருகிவரும் தனிமை, மனநல அழுத்தங்கள், தொழில்நுட்ப இடையூறுகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி அவர் பேசினார்.
சமூகம் பரிணாமம் காணும்போது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பெரும்பாலும் தீர்க்க முடியாத ஒன்றாகவும், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பிரச்சினைகளின் வெளிப்பாடுகளாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அச்சவால்களை எதிர்கொள்ள சமூகப் பணிக்குப் பயிற்சியும், பங்காளிகள், மக்களின் ஆதரவும் தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
“புதிய பள்ளி நமது சமூகப் பணியாளர்களுக்குப் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள பலரின் தேவைகளைச் சமாளிக்கத் தேவையான அறிவையும் திறன்களையும் வழங்கும்,” என்று தெரிவித்தார் திரு லீ.
‘கொம்லிங்க் பிளஸ்’ போன்ற ஒருங்கிணைந்த மாதிரிகளை நோக்கி நகரும்போது நாடு முழுவதும் எதிர்கால சமூகப் பணிக்கு வலுவான கூட்டாண்மை, ஒத்துழைப்பு, நிறுவன எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் விருப்பம் தேவைப்படும் என்றார் அமைச்சர் லீ.
ஆசிரியர்களும், மாணவர்களும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடவும் அவர் ஊக்குவித்தார்.
“எதிர்கால சவால்களுக்குத் தயாராகப் புதிய தலைமுறை சமூகப் பணியாளர்களை வளர்க்க வேண்டும். தற்போதுள்ள பணியாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் கைகொடுக்க வேண்டும். அதற்கு இன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
புதிய பள்ளியானது நான்கு முக்கிய அம்சங்கள் மூலம் அதிக அளவில் சமூகப் பணியாளர்களை உருவாக்க முற்படும். வாழ்நாள் கற்றல், பயன்முறை, இடைநிலைக் கல்வி, சமூகப் பணித்துறைத் தலைவர்களை வளர்த்தல், பல அமைப்புகளுடனும், அரசாங்கத்துடனும் அர்த்தமுள்ள பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ளல் ஆகியவையே அந்நான்கு அம்சங்கள்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் தனது அனைத்து சமூகப் பணி பாடத்திட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கையை ஓராண்டிற்கு ஏறத்தாழ 300ஆக அதிகரிக்கவுள்ளது.

