வர்த்தக நிகழ்ச்சிகள் துறை தொடர்ந்து புதிய பரிமாணங்களைக் காணும் நிலையில் சிங்கப்பூர் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள திறனாளர் குழுவை வலுப்படுத்த வேண்டும் என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.
அதற்கு, சிங்கப்பூரின் ‘மைஸ்’ எனப்படும் சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் துறை தொழில் நுட்பம், மனிதவளம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யவேண்டும் என்றார் அவர். வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ‘மைஸ்’ கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஏற்கெனவே ‘மைஸ்’ துறைக்கான மின்னிலக்கத் திட்டத்தை உருவாக்கியிருப்பதாகத் திருவாட்டி கான் கூறினார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டமிடல் கருவிகள் உட்பட, துறைக்கான மின்னிலக்கத் தீர்வுகளுக்கு அத்திட்டம் வழிகாட்டுகிறது.
“தொழில்நுட்பம் அதனைப் பயன்படுத்துபவர்களின் திறனைப் பொறுத்தே அமையும்,” என்று கூறிய அவர், அடுத்த தலைமுறைத் திறனாளர்களை ஊக்குவிக்கத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் சுற்றுப்பயணத் திட்டம் 2040இன் ஓர் அங்கமாக, சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைவிட அவர்கள் இங்கு எவ்வளவு செலவிடுகிறார்கள், எவ்வளவு காலம் தங்குகிறார்கள், சிங்கப்பூர்க் கலாசாரத்தை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பில்லாமல் நடந்துகொள்கிறார்களா என்பன போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் அதிகக் கவனம் செலுத்தும் வேளையில் திருவாட்டி கானின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
2040க்குள் 'மைஸ்’ சுற்றுலா வருவாயை மும்மடங்காக உயர்த்த கழகம் இலக்கு கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய 'மைஸ்’ நடுவத்தை அமைக்க அடுத்த ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் தொழில்துறையின் நிலைத்தன்மைக்கான அடுத்தகட்ட வழிகாட்டித் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறந்த குழுக்களை உருவாக்குவது அவசியம்: டான் சுவான் ஜின்
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், தலைவர்கள் தங்களின் குழுவினரை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிறுவனங்களின் வெற்றிக்கு மனிதவளமே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், ஊழியர்களிடம் பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்றார்.

