ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகை: பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயன்பாடு

காலாவதித் தேதியால் பயன்பாடு அதிகரிப்பு

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகை: பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயன்பாடு

3 mins read
347ca853-b5b3-47f8-bbb6-49fd8c385256
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் கடந்த ஆண்டு 606,000 தனிநபர்களும் 23,000 நிறுவனங்களும்  பங்குபெற்றதாகப் பதிவாகியுள்ளது. - படம்: சாவ்பாவ்

30 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட, தகுதியுள்ள சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர், தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) தொகையைப் பயன்படுத்தியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் திட்டமான ஸ்கில்ஸ்ஃபியூச்சர், 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அது பத்தாண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் 606,000 தனிநபர்களும் 23,000 நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்குபெற்றதாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியான ஒருமுறை மட்டுமான நிரப்பு தொகை முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஆதரிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களைக் காட்டிலும் டிசம்பரில் கூடுதலானோர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையைப் பயன்படுத்தியதாகப் பதிவாகியுள்ளது.

2025ல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகைப் பயனீட்டாளர்களிடையே தகவல் தொடர்பு, உணவு பானம், பாதுகாப்பு விசாரணை ஆகிய துறைகள் ஆகப் பிரபலமாக இருந்தன.

இணையக் கற்றல் தளமான ‘கோர்செரா’ (Coursera) முதல் திறன் மேம்பாட்டுக்கான சிறிய வகுப்புகள் வரை பயனாளர்கள் தங்களுக்கான தொகையைப் பயன்படுத்தினர்.

திறன் மேம்பாட்டுக்கான தேவை பெருகினாலும் வகுப்புகளின் தரம் கட்டிக்காக்கப்பட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன.

வேலைத் தரத்தை உயர்த்திய திறன் மேம்பாடு

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்ஜி (SkillsFuture SG) ஆதரவில் பெறப்பட்ட பயிற்சி, தங்கள் வேலைத் தரத்தை உயர்த்தியுள்ளதாக, இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றில் பங்குபெற்றோரில் 73 விழுக்காட்டினர் கூறுகின்றனர். 2024ல் இது 69 விழுக்காடாக இருந்தது.

அத்துடன், பங்குபெற்றோரில் 67 விழுக்காட்டினர், அத்தகைய வகுப்புகளால் தங்கள் வாழ்க்கைத் தொழிலில் உயர்ந்திருப்பதாகவும் கூறினர். அதற்கு முந்தைய ஆண்டில் அந்த விகிதம் 64 விழுக்காடாக இருந்தது. 2024ல் 82 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், தாங்கள் பெற்ற பயிற்சித் திறன்களை வேலைக்காகவும் பயன்படுத்த முடிந்ததை உறுதிப்படுத்தினர்.

பணியிடை மாற்றம் செய்யும் தனிநபர்கள், தாங்கள் மேற்கொள்ளும் வகுப்புகளால் அனுகூலம் அடைவதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு தெரிவித்தது.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டத்தில் (Career Transition Programme) பங்கேற்றோரில் 51 விழுக்காட்டினர் ஆறு மாதங்களில் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

இருந்தபோதும், ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்பும் முதலாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

23,000 முதலாளிகள் தங்களது ஊழியர்களை இதுபோன்ற பயிற்சிகளுக்கு 2025ல் அனுப்பியுள்ளனர். இத்தகைய முதலாளிகளின் எண்ணிக்கை 2024ல் 24,000 ஆக இருந்தது.

வேலையிடங்களில் வெளிப்படைப்போக்கு தேவை

திறன் மேம்பாட்டில் ஊழியர்கள் பலர் பங்குபெறுவதைத் தரவுகள் காட்டினாலும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பலன் குறித்த ஆய்வு தேவை என்று தமிழ் முரசிடம் இது குறித்துப் பேசியவர்கள் கூறுகின்றனர்.

மாறிவரும் வேலையிடத் தேவைக்கு ஊழியரணியைத் தகவமைக்கும் பொறுப்பு, நிறுவனங்களிடமிருந்து தனிநபர்களுக்கு மாறி வருவதை இது காட்டுவதாக, ‘தி இலிவேட்’ (The Elevate) குழுமத்தின் நிறுவனர் உமா தனபாலசிங்கம் தெரிவித்தார்.

“ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளச் சொந்தச் செலவில் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள். முதலாளிகளைப் பொறுத்தவரையில் அவர்களில் பலர் குறுகிய கால நோக்கில் செயல்படுகின்றனர். இயன்றவரை அவர்கள் தங்கள் செலவையும் குறைக்க முற்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

ஓய்வுபெற்ற பொறியாளரான 65 வயது டி. ஈஸ்வரன், கணினி மென்பொருள் தொழில்நுட்பராக விரும்பி அதற்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சியை மேற்கொண்டார்.

மே முதல் ஆகஸ்ட் வரை சுமார் நான்கு மாதங்கள் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ நிதியுதவியுடன் தேசியத் தொழிற்சங்க காங்கிரசில் (என்டியுசி) பயிற்சியை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“இந்தத் துறையிலுள்ள வேலை எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. என் வயது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்