30,000 புதிய இணைய பாடங்களுக்கு இன்று முதல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதியைப் பயன்படுத்தலாம்

2 mins read
6191856a-5481-4f20-9920-17da9a80b944
தரவு விஞ்ஞானம், வர்த்தக நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை எடுத்து இணையம் வாயிலாகப் படிப்பதற்கான ஓராண்டு சந்தாத் தொகையைச் செலுத்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதி பயன்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் இரண்டு கற்றல் தளங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளுக்கு தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித் தொகையை இன்று (ஆகஸ்ட் 28) முதல் பயன்படுத்த முடியும்.

கோர்செரா (Coursera), யுடேமி பிஸ்னஸ் (Udemy Business) ஆகியன அந்த கற்றல் தளங்கள்.

அந்தத் தளங்களில் வழங்கப்படும் தரவு அறிவியல், வர்த்தக நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை இணையம் வாயிலாகப் படிப்பதற்கான ஓராண்டு சந்தாத் தொகையைச் செலுத்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயன்படும்.

கோர்செரா சந்தாத் தொகையைச் செலுத்துவதன் மூலம் 7,700க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான இணைப்பு கிடைக்கும். அத்துடன், புதிய திறன்களைக் கற்றுத் தரும் 2,500 கற்றல் திட்டங்களையும் அந்தத் தளம் வழங்கும்.

அதேபோல, யுடேமி சந்தாவைச் செலுத்தினால் 27,000 இணைய வகுப்புகளுக்கான இணைப்பு கிடைக்கும்.

25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்த இரு தளங்களின் சந்தாவைச் செலுத்தலாம். அவர்களின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் அரசாங்கம் முதல்முறை செலுத்திய 500 வெள்ளியையும் 2020ஆம் ஆண்டு ஒருமுறை நிரப்பப்பட்ட 500 வெள்ளியையும் அவர்கள் இதற்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோர்செராவின் பாடத்திட்டங்களில் சேருவதற்கான பதிவு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறும்.

அதேபோல யுடேமி பாடத்திட்டங்களில் சேர்வதற்கான பதிவு செப்டம்பர் 15 வரை நடைபெறும்.

இவ்விரு தளங்களிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சேர்க்கை நடைபெறும்.

பதிவு செய்து, கணக்கைத் திறந்த பின்னர் யுடேமி இணையப் பாடங்களை ஆண்டு முழுவதும் எடுத்துப் படிக்கலாம்.

கோர்செரா தளத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாடங்களைக் கற்பதாக அதன் ஆசிய பசிபிக் வட்டார நிர்வாக இயக்குநர் ராகவ் குப்தா தெரிவித்தார்.

இந்த ஆண்டு, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (GenAI) பாடத்திற்கு சாதனை அளவாக ஏராளமானோர் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மின்னிலக்க மற்றும் பசுமைப் பொருளியல்கள் தொடர்பான பாடங்களிலும் சிங்கப்பூரில் கற்போர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக திரு குப்தா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்