ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் தற்போதைய திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும் என்று கல்விக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்டத்தின் முழுத் தகுதிப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அந்தப் பாடப்பிரிவுகளைச் சேர்ப்பதன்மூலம் தொழில்துறை சார்ந்த பரந்த அளவிலான பாடப்பிரிவுகளிலிருந்து கற்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தெரிவுசெய்ய முடியும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.
சுகாதாரம், தகவல் தொடர்பு, பொறியியல், ஊடகம், பாலர் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 200 ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்டத்தின் பாடப்பிரிவுகள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு முதல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு ஜனில் குறிப்பிட்டார்.
என்டியுசி கற்றல் மையம் வழங்கும் ஊழியரணி திறன் தேர்ச்சித் திட்டத்தின் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார நிபுணத்துவ பட்டயப் படிப்பு, பாதுகாப்பு, இடர் மேலாண்மை, அவசரகாலச் செயல்பாடு போன்ற திறன்களில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கிறது.
படிப்பை முடித்த பிறகு பங்கேற்பாளர்கள் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரியாகப் பணிபுரியத் தொடங்கலாம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் 40 வயதும் அதற்கும் மேற்பட்ட, வாழ்க்கைத்தொழிலின் இடைக்காலத்தில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் 2024ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

