அண்மையில் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்ட வரவுசெலவுத் திட்டத்தில் சிங்கப்பூரர்கள் வேலைகளைப் பெறவும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் அதையும் தாண்டி அத்திட்டத்திற்கு மேலும் கூடுதல் ஆதரவு அளிக்கப்படும் என்று பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.
துரித மாற்றங்களைக் கண்டு வரும் தொழில்துறைகளைச் சமாளிக்க வயது வந்தோருக்கான கல்வி மற்றும் பயிற்சி முறைகளை இன்னும் மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
இது, சிங்கப்பூரர்களின் வேலை பற்றிய கவலைகளுக்கு உரிய வகையில் கைகொடுக்கும் என்றார் அவர்.
பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கிய வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து திரு வோங் உரையாற்றினார்.
வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டம் போன்ற முக்கிய பயிற்சி மற்றும் ஊழியர்களுக்கான நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 4,000 வெள்ளி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதியும் பயிற்சிப் படியும் வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பணியிடைக்கால சிங்கப்பூரர்கள் இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட துறைகளில் முழு நேரமாகவே பகுதிநேரமாகவோ பயிற்சி பெறலாம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டத்தின்கீழ், வேலையிழந்த குறைந்த மற்றும் நடுத்தர வருமான சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சில தகுதிகளின் அடிப்படையில் மற்றொரு வேலையைத் தேடும் முயற்சிக்காக அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு 6,000 வெள்ளி வரை வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து பேசிய திரு வோங், “ஒவ்வொரு வேலையையும் எங்களால் காப்பாற்ற முடியாது. ஆனால் சிங்கப்பூரில் ஒவ்வொரு ஊழியருக்கும் முழு ஆதரவிலான உதவியை வழங்குவோம்,” என்றார்
அரசாங்கம், அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் இன்னும் கூடுதலான வாய்ப்புகளையும் சிறந்த வேலைகளையும் உருவாக்க முயற்சிகளை செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பொதுவாக வயது வந்தோருக்கான கல்வி மற்றும் பயிற்சியைவிட வேலைவாய்ப்புக்கு முந்தைய பயிற்சியில் அதிக முதலீடு செய்கின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் பல அம்சங்களில் முன்னிலையில் உள்ளது.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில், நாம் பரிசோதனை, புதுமை மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஷெரல் சான் (ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி), பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த ஃபைசால் மானாப் (அல்ஜுனிட் குழுத் தொகுதி) உட்பட ஆளும் எதிர்தரப்பு உறுப்பினர்கள், மாறி வரும் தொழில்துறையில் சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்ததற்கு பிரதமர் வோங் பதிலளித்துப் பேசினார்.
“அரசாங்கம், தொழிற்சங்கம், முதலாளிகள் உள்ளிட்ட முத்தரப்பு பங்காளிகளுடன் சேர்ந்து ஊழியர்களின் பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டு முன்னேற விரும்புகிறோம்,” என்றார் பிரதமர் வோங்.