சிங்கப்பூரர்களின் உத்தேச ஆயுட்காலம் அதிகரிக்கும் அதேவேளை மக்கள் வெவ்வேறு கட்டங்களில் தங்களின் வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கும் நிலையில், அவர்களுக்கு ‘ஸ்கில்ஸ்பியூச்சர்’ புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
புதிய பட்டதாரிகள், பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் ஊழியர்கள், ஆட்குறைப்புக்கு ஆளானோர் ஆகியோருக்கான திட்டங்களை ‘ஸ்கில்ஸ்பியூச்சர்’ அளிக்கும். இருக்கும் வாய்ப்புகளை முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள உதவி வழங்கப்படும் என்று நவம்பர் 12ஆம் தேதி வெவ்வேறு சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் திரு வோங் கூறினார்.
வாழ்நாள் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய அளவிலான ஓர் இயக்கமே ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’. இதை ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ என்ற அரசாங்க அமைப்பு நிர்வகித்து வருகிறது.
ஊழியரணிக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் சிங்கப்பூரர்களுக்கு, பள்ளியில் பெற்ற அறிவும் கற்ற திறன்களும் உண்டு. இருப்பினும், வேலைக்கான தேவைகளின் அடிப்படையில் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் தேவையும் இருப்பதாக நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங் சுட்டினார்.
இதைச் செயல்படுத்த அவர்கள் தங்களின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதியைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் ஊழியர்கள், குறிப்பாக தங்களின் 40களில் அல்லது அதற்கும் மேற்பட்ட வயதில் உள்ளோருக்குத் திறன் மேம்பாடு தொடர்பில் கூடுதல் சவால்கள் உள்ளன. வேலையிலிருந்து சற்று விடுப்பு எடுத்து திறன் மேம்பாட்டில் ஈடுபடுவதையும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக, பயிற்சி வகுப்புகளின் கட்டணத்திற்குக் கூடுதலாக $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதி வழங்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு, 40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் இந்தப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றவாறு 24 மாதங்களுக்கான பயிற்சிப் படித்தொகையை மாதந்தோறும் பெறலாம். இதனால் வாழ்க்கையில் பின்னாளில் மேலும் பல தெரிவுகள் இருக்கும் என்றார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஸ்கில்ஸ்பியூச்சர் வேலைதேடுவோர் ஆதரவுத் திட்டத்தின் மூலம் ஆட்குறைப்புக்கு ஆளானோருக்கும் ஆதரவு வழங்கப்படும் என்றார் திரு வோங்.
சிங்கப்பூரர்களின் அதிகரிக்கும் ஆயுட்காலத்தால் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் கூடுதல் உதவி வழங்கும் என்று கூறிய அவர், அந்தக் காரணத்துக்காகவே ஸ்கில்ஸ்ஃபியூச்சரை அது கணிசமான அளவு வலுப்படுத்தி வருகிறது என்றார்.