சிங்கப்பூர் கார் உரிமையாளர்களுக்கு ‘விஇபி’ வில்லைக்கு விண்ணப்பிக்க உதவும் வணிகங்களின் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி முறை (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
வரிசையில் நிற்காமல் ‘விஇபி’ வில்லையைப் பெற உதவும் இச்சேவை, ‘விஇபி’க்கு இணையத்தில் விண்ணப்பித்தல், தனிப்பட்ட விவரங்களைத் திருத்துதல், ஏற்கெனவே உள்ளதை ரத்து செய்து, ஆர்எஃப்ஐடி எனப்படும் வானலை அதிர்வெண் அடையாள வில்லைகளை ஜோகூர், சிங்கப்பூரில் உள்ள ‘விஇபி’ நிலையங்களில் பெற்று அவற்றை நிறுவுதல் போன்றவற்றை வழங்குவதாக வாடிக்கையாளர்களும் அத்தகைய சேவைகளை வழங்குவோரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
இத்தகைய சேவைகளுக்கு $25 முதல் $168 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே, மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் இணையத்தளம் வழியாக தாமே விண்ணப்பித்தால் வாகன உரிமையாளர்கள் மொத்தம் செலுத்தும் தொகை 40 ரிங்கிட் ($12.20)தான் செலவாகிறது.
‘வழங்கப்படும் தகவல்கள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்கும்பட்சத்தில்’ வாகன உரிமையாளர் சார்பில் ‘பிரதிநிதிகள்’ அனுமதிக்கப்படுவதாக மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனமான இன்னோக்ஸ் குழுமம், விஇபி சேவைகளை $138க்கு வழங்குவதாக ஆகஸ்ட் மாதத்தில் த நியூ பேப்பர் தெரிவித்தது. பின்னர் அது கட்டணத்தை $168 ஆக உயர்த்தியுள்ளது.
சிங்கப்பூரின் கார் கழுவும் சேவை நிறுவனமான ரேடியண்ட் வாஷ், ஆகஸ்ட் மாதத்தில் ‘ரேடியண்ட் விஇபி சொலுஷன்ஸ்’ சேவைகளை வழங்கத் தொடங்கியது. அதிகமானோர் அதன் சேவையை நாடுகின்றனர்.
அக்டோபர் 1ஆம் தேதி காலக்கெடு நெருங்கியதும் ஒரு நாளில் கிட்டத்தட்ட 50 முதல் 70 விண்ணப்பங்களைப் பெற்றதாக நிறுவனத்தின் இயக்குநர் டெரிக் ஹெங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதே போன்ற சேவைகள் $25 முதல் $100க்கும் அதிகமான கட்டணத்தில் ஆகஸ்ட் முதல் இணையச் சந்தையான கெரோசலில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அக்டோபர் 3 அன்று, 112,658 ‘விஇபி’ வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 75,412 பொருத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்றும் அறிவித்தார்.


