ஒளிரும் வலைக்குள் பறந்த பந்துகள்: சிங்கப்பூரின் முதல் ‘ஆளில்லா வானுர்திக் காற்பந்துப் போட்டி’

தொழில்நுட்ப ஆடுகளத்தில் மூத்த தலைமுறை

ஒளிரும் வலைக்குள் பறந்த பந்துகள்: சிங்கப்பூரின் முதல் ‘ஆளில்லா வானுர்திக் காற்பந்துப் போட்டி’

2 mins read
42a8c8d5-8a58-4349-b355-7715927ca5e2
‘சில்வர் டிரோன் சாக்கர்’ குழு விளையாட்டுப் போட்டியில், துடிப்பாக மூப்படையும் நிலையத்தைச் சேர்ந்த மூத்தோர் பலர் அணிகளாகப் பங்கேற்று, ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டுத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4
Google News Preferred Icon

கண்களும் கைகளும் துல்லியமாக ஒன்றுக்கொன்று உதவ, ஆளில்லா வானூர்தியை அந்தரத்தில் இயக்கி, அதேவேளையில் காற்பந்திலும் கோல் அடித்து மகிழ்ச்சியுடன் விளையாடித் திளைத்தனர் மூத்தோர் பலர்.

சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற ஆளில்லா வானூர்திக் காற்பந்துப் போட்டி அவர்களுக்கு அவ்வாய்ப்பை அளித்தது.

‘‘என்னைப்போன்ற ஒரு முதியவரால் ஆளில்லா வானுர்திக் காற்பந்துப் போட்டியில் (டிரோன் சாக்கர்) பங்கேற்று விளையாட முடிகிறது என்றால், யாராலும் நிச்சயமாக விளையாட முடியும்," என்றார் திரு பாலசுப்ரமணியம் ரங்கசாமி மாணிக்கம், 65.

திரு பாலா வெளிப்படுத்திய இந்த உற்சாக வரிகள், பரவலாகக் காணப்படும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க சிங்கப்பூரின் மூத்த குடிமக்களும்  தயாராகிவிட்டனர் என்பதற்கான  சான்றாக அமைந்தன.  

இத்தகைய விளையாட்டுகளால் புதிய நட்பும் கிடைப்பதால், வயது வெறும் எண்தான் என்பதை உணர முடிவதாகப் பங்கேற்பாளர்கள் பலரும் கூறினர்.

சென்ற வார இறுதியில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம், மூத்தோரின் புத்துணர்ச்சிக்கும் நவீன தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் மேலும் வலுச்சேர்த்தது.

இந்த விளையாட்டின் முக்கிய அம்சம், மூன்று நிமிடங்களுக்குள் முடிந்தவரை அதிக கோல்களை அடிப்பது. 

‘‘நமது பார்வையும் கை அசைவுகளும் ஒன்றிணைந்து கூர்மையாகச் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் போட்டியில் பங்கேற்ற திரு வின்சென்ட்.

எனினும், தாம் அவ்விளையாட்டில் அதிகம் ரசிப்பது, அது ஒரு குழு விளையாட்டு என்பதையும், நாம் சிறப்பாக விளையாடும் அதே நேரத்தில் எதிரணியினரை கோல் அடிக்க விடாமால் தடுப்பாட்டம் ஆடுவதும் ஆர்வமூட்டுவதாக இருக்கும் என்று அவர் கூறினார் .

மூன்று நாள்களாக நடைபெற்ற சிங்கப்பூரின் முதலாவது ‘சில்வர் டிரோன் சாக்கர்’ குழு விளையாட்டுப் போட்டியில், துடிப்பாக மூப்படையும் 24 நிலையங்களைச் சேர்ந்தோர்  29 அணிகளாகப் பங்கேற்று, ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டுத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.  

‘கற்றுக்கொள்ள வயதில்லை’

போட்டியில் பங்கேற்றிருந்த திருவாட்டி மார்த்தா கேப்ரியல், 62, வாராந்தரப் பயிற்சிகள் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்க உதவின என்றார்.

‘‘இவ்வயதிலும் மனத்தையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் இப்போட்டிகள், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும், ஒரு குழுவில் இணைவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கின்றன,’’ என்றார். 

புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, நண்பர்களை உருவாக்குவதற்கும் நலமாக இருப்பதற்கும் இது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார் திரு பாலா.

சிங்கப்பூர்ச் சமூக அறநிறுவனத்தின் மூத்த அறப்பணி ஆலோசகர் சிவசங்கர், “மூத்தோர் தங்களின் வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து  வெளியே வந்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் ‘டிரோன் சாக்கர்’ போன்ற புதுமையான திட்டங்கள் உதவுகின்றன,’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

‘ஃபன்! ஃபண்ட்’ உட்பட நன்கொடையாளர்களின் உத்திபூர்வ ஆதரவால், ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 130க்கும் மேற்பட்ட மூத்தோர் பராமரிப்பு நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கண்கள், கைகளின் இயக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் ஆளில்லா வானூர்திகள் விளையாட்டு, மூத்தோர் நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு, சமூகத்தோடு இணைந்து சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ புதிய வாசலைத் திறந்துவிட்டுள்ளது.  

குறிப்புச் சொற்கள்
மூத்தோர்சிங்கப்பூர்ஆளில்லா வானூர்திவிளையாட்டு