ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய சேம நிதியின் (மசேநி) சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் இந்த விகிதம் 4.05 விழுக்காடாக இருந்தது. 2024ன் முதல் காலாண்டில் இந்த விகிதம் 4.08 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
10-ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கப் பங்குபத்திரங்களிலிருந்து கடந்த 12 மாதங்களில் கிடைத்த வருவாயுடன் ஒரு விழுக்காடு சேர்த்து, மசே நிதியின் மூன்று கணக்குகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதாக மசே நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) மே 29ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அனைத்து வட்டி விகிதமும் ஆண்டு அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மசே நிதி சாதாரணக் கணக்கிற்கான (ஓஏ) வட்டி விகிதம், மாற்றம் ஏதுமின்றி 2.5 விழுக்காடாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது. மூன்று காலாண்டுகளாக இந்த வட்டி விகிதம் 2.5 % ஆக உள்ளது.
அதேபோல், வீவக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதச் சலுகை 2.6 விழுக்காடாகத் தொடரும். இதுவும் மூன்று காலாண்டுகளாக 2.6 % வட்டி விகிதமாக உள்ளது.
55 வயதை எட்டாத மசே நிதி உறுப்பினர்களின் கணக்குகளில் உள்ள முதல் $60,000க்குக் கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகை வழங்கப்படும் நடைமுறை தொடரும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு வழங்கப்படும் வட்டி, அதிகபட்சம் $20,000 மட்டுமே வழங்கப்படும்.
55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்க்கு முதல் $30,000க்குக் கூடுதலாக 2 விழுக்காட்டு வட்டித் தொகையும், அடுத்த $30,000க்கு கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகையும் வழங்கும் நடைமுறையும் தொடரும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு வழங்கப்படும் வட்டியின் அதிகபட்சத் தொகை $20,000 என்று கூறப்பட்டது.

