தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய மாமன்னரின் முடிசூட்டு விழாவில் மூத்த அமைச்சர் லீ

2 mins read
4e96b040-7a94-4ff9-8cd0-cc0b2432c794
சிங்கப்பூருக்கு மே 6 முதல் 7 வரை சுல்தான் இப்ராகிம் (இடமிருந்து 3வது) அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது முடிசூட்டு விழாவுக்கு வருகை தருமாறு மூத்த அமைச்சர் லீக்கு அழைப்பு விடுத்தார்.  - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் முடிசூடும் சடங்குபூர்வ விழா, ஜூலை 20ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.

அதில் கலந்துகொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களுள் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் ஒருவர்.

மூத்த அமைச்சர் லீ மலேசியாவுக்கு ஜூலை 19 முதல் 22 வரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கோலாலம்பூரிலுள்ள தேசிய அரண்மனையில் நடைபெறவிருக்கும் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்.

சடங்குபூர்வ விழாவை அடுத்து மாலையில் மூத்த அமைச்சர் லீ, அரசகுல விருந்திலும் கலந்துகொள்வார் என்று 18ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மலேசியாவின் மாமன்னராக அரியணை ஏறும் விழாவுக்கு, சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஒருவர் செல்வது இதுவே முதல்முறை.

சிங்கப்பூருக்கு மே 6 முதல் 7 வரை சுல்தான் இப்ராகிம் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது முடிசூட்டு விழாவுக்கு வருகை தருமாறு மூத்த அமைச்சர் லீக்கு அவர் நேரடியாக அழைப்பு விடுத்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்துவந்தது.

நாட்டின் மூன்றாவது பிரதமராக இருந்த திரு லீ, மே 15ஆம் தேதி பதவி விலகுவதற்கு முன் சிங்கப்பூருக்கு வருகை தந்த வெளிநாட்டு உயர் பதவியாளர்களில் சுல்தான் இப்ராகிமும் ஒருவர்.

அந்தப் பயணத்தின்போது சுல்தான் இப்ராகிமை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசகுல விருந்தில், மலேசியாவுக்கும் ஜோகூருக்கும் ‘நெருங்கிய நண்பர்’ திரு லீ என்று அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.

முடிசூடும் சடங்குபூர்வ விழாவில் கலந்துகொள்வதுடன் மலேசியப் பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிமை மூத்த அமைச்சர் லீ சந்திக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பல்வேறு மலேசிய மன்னர்கள், அமைச்சர்கள், தலைவர்கள் ஆகியோரையும் அவர் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மூத்த அமைச்சர் லீயுடன் அவரின் மனைவி திருவாட்டி ஹோ சிங், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் ஆகியோரும் கலந்துகொள்வர்.

குறிப்புச் சொற்கள்