மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு பாராட்டு தெரிவிக்க 2024 அக்டோபர் 10ஆம் தேதி இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து நிகழ்ச்சி, தற்போது 2025 ஜனவரி 11ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியச் சமூக மேம்பாட்டிற்கு மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ‘மரினா பே சேண்ட்ஸ் கிராண்ட் பால்ரூம்’ வளாகத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சி இரவு 7 மணியளவில் தொடங்கும். இந்நிகழ்ச்சியில் மேசை முன்பதிவு செய்துள்ளோர் 6.30 மணிக்குள் உரிய இடங்களில் சென்று அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், பிரதமராகத் திரு லீயின் சாதனைகளைப் பாராட்டுவதுடன், இந்திய சமூகத்தினர் மீது அவர் காட்டிய அன்பு, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் செலுத்திய ஆர்வம் குறித்தும் பேசப்படும்.
“இருபதாண்டுகாலம் பிரதமராகப் பணியாற்றிய திரு லீ, ஒவ்வோர் இன மக்களுக்கும் உரிய கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரவீந்திரன்.
மேலும்,“இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை நன்கு அறிந்தவர் திரு லீ. சமூகத்திற்கு அவர் அளித்த ஆதரவிற்கும், சிறந்த தலைமைத்துவத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது”, என்றும் திரு ரவீந்திரன் கூறினார்.
இந்நிகழ்ச்சி கலை, பண்பாடு, மொழி போன்றவற்றின்மீது திரு லீ கொண்டுள்ள பேரார்வத்தையும், அவற்றை மேற்கொள்ள மக்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் எனும் அவரது மேன்மையான எண்ணத்தையும் பெருமைப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

