தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்களை இழப்பதால் அரசாங்கம் நலிவடையாது என்ற வாதம் அபத்தமானது: மூத்த அமைச்சர் லீ

3 mins read
8872f62e-8d0f-49a5-9f5c-0725d703681a
630 பிடோக் ரெசர்வோர் சந்தை, உணவு நிலையத்தில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். உடன் மக்கள் செயல் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி வேட்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமைச்சர்களாகப் பணியாற்றும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்குத் திரும்பாவிட்டாலும் அரசாங்கம் நலிவடையாது என்ற வாதம் அபத்தமானது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.

எல்லாக் குழுக்களிலுமே பலதரப்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, அவர்களில் சிலருக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாகவும் வேறு சிலர் ஆதரவு அளிக்கும் நிலையில் செயலாற்றுவதாகவும் திரு லீ கூறினார்.

பிடோக் ரெசர்வோர் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 29) அல்ஜுனிட் குழுத்தொகுதியின் வேட்பாளர்களுடன் தொகுதி உலா மேற்கொண்ட திரு லீ, செய்தியளார்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

“குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டன்று என்றால், யாரைக் கொண்டு வேண்டுமானாலும் நல்லதோர் அரசாங்கத்தை அமைப்பதில் எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது. வலிமையானவர்களைக் கூட்டு சேர்க்க வேண்டியதற்கான அவசியமும் இருக்காது,” என்று மூத்த அமைச்சர் கூறினார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதிக்குச் சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அங்குள்ள பொதுமக்களுடன்  கலந்துறவாடினார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதிக்குச் சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துறவாடினார். - படம்: கி.ஜனார்த்தனன்

நல்லாட்சி வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் முக்கால் பங்கிற்கும் அதிகமான இடங்கள் மக்கள் செயல் கட்சிக்கு தேவை என்பது கடும் பிரச்சினைக்கான அறிகுறி என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளார் பிரித்தம் சிங் உரைத்ததற்குப் பதிலடியாகத் திரு லீ இவ்வாறு கூறினார்.

இந்தத் தேர்தலில் நிற்கின்ற பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் 26 பேருக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கிடைத்தாலும்கூட அரசாங்கத்திற்கு போதிய சுதந்திரமும் கவனமும் இருப்பதாகத் திரு சிங் திங்கட்கிழமை தெரிவித்தார்.

திரு ஹெங் சுவீ கியட்டைக் காட்டிலும் வயதானவரான துணைப் பிரதமர் கான் கிம் யோங் பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே ஓய்வெடுக்கத் தயாராக இருந்ததாகப் பிரசாரக்கூட்டத்தின்போது அவர் கூறினார்.

“திரு கான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரே ஒரு தவணைக்காலத்திற்குத்தான் பணியாற்றப்போகும் வாய்ப்பு அதிகம்,” என்றார் திரு சிங்.

இதற்குப் பதிலளித்த திரு லீ, “திரு கான் மிகவும் மதிப்புமிக்க அமைச்சர். இருந்தாலும் எனக்காக வாக்களியுங்கள் என்று (திரு சிங்கால்) சொல்ல முடியாது அல்லவா? எனவே அவர் இப்படிச் சொல்கிறார்,” என்று சொன்னார்.

எதிர்க்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து அமைக்கப்படும் என்று திரு சிங் வாதிட்டது குறித்து பேசிய திரு லீ, சிங்கப்பூர் முழுவதும் அடிப்படை வசதிகளும் அரசாங்க சேவைகளும் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

“இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதால் வித்தியாசம் உள்ளதா? ஆம் என்பதே பதில்,” என்று பிரதமர் லீ கூறினார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதியிலுள்ள மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள், தங்களது வட்டாரவாசிகளின் நலன்களை மனத்திற்கொண்டு அரசாங்கத்துடன் செயலாற்றுவர் என்று திரு லீ கூறினார்.

“அந்தக் கவலைகளையும் தேவைகளையும் அரசாங்கம் புரிந்துகொள்ள உதவுவதற்கு இந்த வேட்பாளர்களால் இயலும்,” என்றார் அவர்.

தொகுதி உலாவின்போது திரு லீக்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆர்க்கிட் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
தொகுதி உலாவின்போது திரு லீக்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆர்க்கிட் மாலைகள் அணிவிக்கப்பட்டன. - படம்: கி.ஜனார்த்தனன்

அல்ஜுனிட், ஜாலான் காயு ஆகிய இடங்களுக்குச் செல்வதாகக் குறிப்பிட்ட மூத்த அமைச்சர் லீ, அவை மக்கள் செயல் கட்சிக்கு முக்கியமான தொகுதிகள் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்த அவ்வாறு செய்வதாகக் கூறினார்.

“நாம் எங்கு அதிகம் தேவைப்படுகிறோமோ அங்கு செல்கிறோம். அங்கு நாம் செல்வது, ஓர் அறிகுறியாகும். இந்தப் போராட்டம் முக்கியம். அதனை முக்கியத்துவத்துடன் கருதுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“இது உங்கள் எதிர்காலம் பற்றியது. சிறந்ததோர் அணியுடன் உங்கள் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் உறுதிப்படுத்தி, உலகப் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்தக் காலகட்டத்தைச் சிங்கப்பூர் கடந்து வருவது பற்றியது,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

தொகுதி உலா வேளையில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் மூத்த அமைச்சர் ஒருவர் வருகை அளித்தது இது இரண்டாவது முறை.

இந்தத் தேர்தலில் போட்டியிடாத டியோ சீ ஹியன், ஏப்ரல் 25ஆம் தேதியன்று பிடோக் 538 சந்தை, உணவு நிலையத்திற்குத் தொகுதி உலா சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்