இந்தோனீசியப் பல்கலைக்கழகம் ஒன்று சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு வாழ்நாள் விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்து உள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரிடரின்போது நிவாரண உதவிகளில் சிங்கப்பூர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அந்த விருது திரு லீக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அந்த அர்-ரனிரி வாழ்நாள் விருதை பண்டா அச்சேயில் உள்ள அர்-ரனிரி அரசாங்க இஸ்லாமியப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (டிசம்பர் 23) வழங்கியது.
திரு லீ சார்பாக சிங்கப்பூரின் தென்கிழக்கு வட்டார மேயர் முஹம்மது ஃபாஹ்மி அலிமான் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை (டிசம்பர் 25) வரை நடைபெறும் அச்சே அனைத்துலகக் கருத்தரங்கில், சுனாமிப் பேரிடரின் 20ஆம் ஆண்டு நினைவையொட்டி விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
2004 டிசம்பர் 26ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, ராட்சத அலைகளை உருவாக்கியதோடு 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தையும் ஏற்படுத்தியது.
அதன் விளைவாக இந்தோனீசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து போன்றவை உள்ளிட்ட பல நாடுகளின் கரையோரத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 230,000 பேர் உயிரிழந்தனர்.
உலக வரலாற்றில் ஆக மோசமான ஆட்கொல்லி பேரிடராக அந்தச் சம்பவம் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் உள்ள அச்சே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்தப் பேரிடரை நினைவுகொள்ளும் விதமாக நடத்தப்படும் கருத்தரங்கில் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, துருக்கி, மொரோக்கோ போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.