அமெரிக்கா செல்கிறார் மூத்த அமைச்சர் லீ

2 mins read
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றுவார்
d0635dc5-b97f-4203-9eb3-7e24f0ba5bd3
பாஸ்டனில் வசிக்கும் சிங்கப்பூர் சமூகத்தினரை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சந்திப்பார். - படம்: சாவ் பாவ்

மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் நவம்பர் 18 வரை பணிநிமித்தமாக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் விரிவுரை ஆற்றுவார்.

பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை (நவம்பர் 9) இதைத் தெரிவித்தது. தம் பயணத்தின் முதல் கட்டமாக மூத்த அமைச்சர் லீ, மாசசூசெட்ஸ் மாநிலம், பாஸ்டன் நகருக்குச் செல்வார் எனப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எஃப்.கென்னடி அரசு நிர்வாகம் தொடர்பான கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) வருடாந்தர எட்வின் எல்.காட்கின் விரிவுரை ஆற்றுவார்.

சிங்கப்பூர் நேரப்படி நவம்பர் 13ஆம் தேதி நள்ளிரவுக்கும் அதிகாலை 1.15 மணிக்கும் இடையே நடைபெறும் இந்த விரிவுரையின் நேரலைக்கான இணைப்பு, மூத்த அமைச்சர் லீயின் ஃபேஸ்புக்கில் கிடைக்கும்.

மூத்த அமைச்சர் லீ, தலைமைத்துவத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் கட்டியெழுப்பவும் பொருளியலை வளர்த்து உலகளவில் சிங்கப்பூருக்கென தனியிடம் அமைக்க எவ்வாறு முனைந்தார் என்பதைப் பங்கேற்பாளர்கள் அறியலாம் என ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் சமுதாய, அரசியல் ஒற்றுமை, கொவிட்-19 பெருந்தொற்றை சிங்கப்பூர் எவ்வாறு கையாண்டது என்பது பற்றிய திரு லீயின் கண்ணோட்டங்களும் விரிவுரையில் இடம்பெறும்.

பாஸ்டனில் வசிக்கும் சிங்கப்பூர் சமூகத்தினரை மூத்த அமைச்சர் லீ சந்திப்பார்.

பின்னர், ‘ஜிஐசி இன்சைட்ஸ்’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் நியூயார்க் செல்வார். வர்த்தக, முதலீட்டுச் சமூகத்துக்குச் சம்பந்தமான விவகாரங்களை முக்கியத் தலைவர்கள் அங்கு கலந்தாலோசிப்பர். ஜிஐசி மன்றத்தின் தலைவர் என்ற முறையில் திரு லீ முக்கிய உரையாற்றுவார்.

குறிப்புச் சொற்கள்