சிங்கப்பூர் சுங்கத் துறையால் அனுப்பப்படுவது போல் உள்ள மோசடி குறுஞ்செய்திகளிடம் கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு மூத்த அமைச்சர் லீ சியன் லூங் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
அண்மையில் இதுபோல் பல மோசடி குறுஞ்செய்திகள் தமக்கு அனுப்பப்படுவதாகவும் திரு லீ செப்டம்பர் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
“பொட்டலம் ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறையிடம் இருந்து குறுஞ்செய்தி கிடைத்தது. குறுஞ்செய்தி தொலைபேசி எண்ணில் இருந்து வராமல், எழுத்துகள் கொண்ட தொடரில் இருந்து வந்தது. எழுத்துகள் கொண்ட தொடரில் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் அது உண்மையாக இருக்கும் என்று முதலி நம்பிவிட்டேன்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
இருப்பினும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கீழ் வரும் அமைச்சுகளும் அமைப்புகளும் gov.sg என்ற அனுப்புநர் பின்குறிப்புடன் குறுஞ்செய்தி அனுப்பும். ஆனால் இந்த குறுஞ்செய்தி அனுப்புநர் விவரத்தில் இல்லை என்றார் அவர்.
மேலும், எழுத்துகள் கொண்ட தொடரில் இருந்து குறுஞ்செய்தி வருவது குறித்து தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் கேட்டதாகவும் மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்.
இணையத்தில் உள்ள செயலிகள் கொண்டு எழுத்துகள் கொண்ட தொடரில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என்பதை அதிகாரிகள் விளக்கினர். இதனால் பொதுமக்கள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்காமல் இருக்குமாறு திரு லீ கேட்டுக்கொண்டார்.