கடந்த அறுபது ஆண்டுகளில், அமெரிக்காவின் விரைவான வளர்ச்சியாலும் சீனாவின் பொருளியல் சீர்திருத்தத்தாலும் சிங்கப்பூர் பெரும் பயனடைந்தது. ஆனால், உலகமயமாதலால் பலனடைந்த நிலையை அது நீண்டகாலமாக பெற்று வந்தாலும், இப்போது ஒரு முக்கியமான சவாலை எதிர்கொள்கிறது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தப் புதிய சூழலில், சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளையும் விரிவான சந்தைகளையும் புதிய விநியோகத் தொடர்களையும் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றார் அவர். புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற 28வது சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொடர்பு வர்த்தக மாநாட்டின் தொடக்க நிகழ்வில் டாக்டர் விவியன் பேசினார்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகின் முக்கியப் பொருளியல்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு எப்படி வளர்ந்தது என்பதை அவர் விளக்கினார்.
“கடந்த 60 ஆண்டுகளாக, நமக்கு இரு உலகின் நன்மைகளும் கிடைத்தன. மேற்குடனும் கிழக்குடனும், அத்துடன் தென்கிழக்காசியாவில் நமது வட்டாரத்துடனும் நாம் இணைந்துகொள்ள முடிந்தது,” என்றார் அவர்.
ஆனால், இப்போது உலகம் பேரளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.
“இப்போது உள்ள போட்டியில் நாம் தவறாகச் சிக்கிக்கொண்டால், இரு உலகின் சிறந்த நன்மைகள் என்பது இரு உலகின் மிக மோசமான நிலைக்கு மாறக்கூடிய ஆபத்து உள்ளது. பிளவுபட்ட விநியோகத் தொடருடன் கூடிய ஒரு சிதறுண்ட உலகம், வர்த்தகம் செய்வதற்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்துகிறது,” என்று டாக்டர் விவியன் எச்சரித்தார்.
இன்றைய நிறுவனங்கள் தொழில்நுட்ப, மின்னிலக்கப் புரட்சிகளின் புயலையும் எதிர்கொள்கின்றன. இது, தொடர்ந்து மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
“தொழில்நுட்ப மாற்றங்களின் இந்த ஆழிப்பேரலையில் நாம் அடித்துச் செல்லப்படாமல், அதற்கு முன்னதாகவே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே நமது சவாலாகும்,” என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, உள்நாட்டில் அதிகரித்துவரும் அரசியல் பதற்றங்களும் மற்றொரு தடையாக உள்ளன.
“உள்நாட்டில் உங்கள் நிலைமை மோசமாக இருந்தால், அது எப்போது பிளவுபட்டு துருவமயப்பட்டாலும், அது இனங்கள், கலாசார நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக அமையும்,” என்று டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.
“இந்த உலகளாவிய, வட்டார, உள்நாட்டுச் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது நாம் எவ்வாறு வர்த்தகம் செய்கிறோம், ஒருவருக்கொருவர் எவ்வாறு இணைகிறோம், புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
இச்சூழலில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதில், ஆசியானின் ஆற்றலை அவர் எடுத்துரைத்தார்.
தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டிய டாக்டர் விவியன், சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைய அரசாங்கம் வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.