தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அல்ஜுனிட் குழுத்தொகுதி எல்லையில் சிறிய மாற்றம்

2 mins read
e653dad8-80ba-4da1-ae01-696055d58a3d
தற்போது அல்ஜுனிட் குழுத்தொகுதியில் உள்ள தெம்பனிஸ் வெஸ்ட் பகுதியில் இருக்கும் மூன்று வாக்களிப்பு வட்டாரங்கள் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கு மாறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) அறிக்கை வெளியிட்டது. 

அதில் எதிர்க்கட்சியின் தொகுதிகளில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இடம்பெறவில்லை. அல்ஜுனிட் குழுத்தொகுதி எல்லையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அல்ஜுனிட் குழுத்தொகுதியில் உள்ள தெம்பனிஸ் வெஸ்ட் பகுதியில் இருக்கும் மூன்று  வாக்களிப்பு வட்டாரங்கள் மக்கள் செயல் கட்சியின் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கு மாறுகிறது.

அந்த மூன்று வாக்களிப்பு வட்டாரங்களில் 3,834 வாக்காளர்கள் உள்ளனர். 

அல்ஜுனிட் குழுத்தொகுதி போலவே மேலும் இரண்டு குழுத் தொகுதிகளின் எல்லைகளில் சிறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி, சுவா சூ காங் குழுத்தொகுதி ஆகியவை அவை. 

கலைக்கப்படும் ஜூரோங் குழுத்தொகுதியிலிருந்து ஒரு வாக்களிப்பு வட்டாரம் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் இணையும். அதில்  2,776 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல் புதிதாகக் கட்டப்பட்டு வரும்  இரண்டு பேட்டைகள் சுவா சூ காங் குழுத் தொகுதியுடன் இணையும். அதில் 193 வாக்காளர்கள் உள்ளனர். 

புதிய எல்லை மாற்றத்தால்  அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 144,032 வாக்காளர்கள் உள்ளனர். ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் 122,891வாக்காளர்கள் உள்ளனர். சுவா சூ காங் குழுத்தொகுதியில் 93,368 பேரும் உள்ளனர். தெம்பனிஸ் குழுத்தொகுதியில் 147,904 வாக்காளர்களும் உள்ளனர். 

பொதுவாக எதிர்க்கட்சியின் தொகுதி எல்லைகளில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் இருக்காது. அது நீண்டகால நடைமுறையாகவும் உள்ளது. 

எதிர்க்கட்சியின் தொகுதிகளான செங்காங் குழுத்தொகுதியிலும் ஹவ்காங் தனித்தொகுதியிலும் எந்த எல்லை மாற்றங்களும் செய்யப்படவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட், செங்காங், ஹவ்காங் ஆகிய மூன்று தொகுதிகளில் பாட்டாளிக் கட்சி வெற்றிபெற்றது. 

எதிர்க்கட்சியின் இரண்டு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் ஒன்பது தொகுதிகளில் எந்த எல்லை மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி, ஜாலான் புசார் குழுத்தொகுதி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி, நீ சூன் குழுத்தொகுதி, பயனியர் தனித்தொகுதி, மேரிமவுண்ட் தனித்தொகுதி, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி ஆகிய ஏழு தொகுதிகள் அவை.

குறிப்புச் சொற்கள்