ஒன்றிணைந்து செயல்படும்போது சிறிய நாடுகள் வலுவடைகின்றன: விவியன்

ஒன்றிணைந்து செயல்படும்போது சிறிய நாடுகள் வலுவடைகின்றன: விவியன்

2 mins read
b621796c-9122-430c-997d-a825d06800af
பசிபிக் தீவுகள் அமைப்பின் தலைவர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது). - படம்: விவியன் பாலகிருஷ்ணன்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஒன்றிணைந்து செயல்படும்போது சிறிய நாடுகள் வலுவடைகின்றன என்ற தோழமைச் செய்தியே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) நடைபெற்ற பசிபிக் தீவுகள் அமைப்பின் தலைவர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பசிபிக் தீவுகள் அமைப்பின் 55வது தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் பாலாவ் நாட்டில் உள்ள கொரோர் நகருக்குச் சென்றிருந்தார். பசிபிக் வட்டாரத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கும் மற்ற நாடுகளின் பங்களிப்புக்கும் இக்கூட்டம் ஒரு முக்கிய அமைப்பாகத் திகழ்கிறது.

சிங்கப்பூர் 2022ஆம் ஆண்டில் இதில் சேர்க்கப்பட்டதிலிருந்து, ஓர் உரையாடல் பங்காளியாக இருந்து வருவதாக வெளியுறவு அமைச்சு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தமது பயணத்தின் முடிவில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட டாக்டர் விவியன், சிக்கல்கள் நிறைந்த தற்போதைய உலகச் சூழலில் பசிபிக் நாடுகளைப் போலவே சிங்கப்பூரும் பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி போன்ற பொதுவான சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும்,அனைத்துலகச் சட்டம், பயன்முனைப்புமிக்க பலதரப்புக் கொள்கை மற்றும் சிறிய நாடுகளுக்குக் கூடுதலான குரலையும் அதிகாரத்தையும் அளிக்கும் வலுவான வட்டார நிறுவனங்கள் ஆகியவற்றில் இருதரப்பும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நமது பங்காளித்துவம் எப்போதுமே நடைமுறைக்கேற்ற கூட்டுறவின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது,” என்று டாக்டர் விவியன் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர்-பசிபிக் மீள்திறன், அறிவுப் பகிர்வுத் திட்டம், சிறிய, வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சிங்கப்பூர் அளித்து வரும் தொழில்நுட்ப உதவி, ஆற்றல் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டம் ஆகிய உதவித் திட்டங்களை நீட்டிப்பதன் மூலம் பசிபிக் நாடுகளுக்குச் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் டாக்டர் விவியன் அறிவித்தார்.

இந்தத் திட்டங்கள் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தவும் பசிபிக் வட்டாரத்தின் மீள்திறனுக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கவும் உதவுகின்றன என்று குறிப்பிட்ட அவர், இதுவரை ஏறத்தாழ 10,000 பசிபிக் அதிகாரிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“2027ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், நிச்சயமற்ற நிலை அதிகரித்துவரும் இவ்வுலகில் சிங்கப்பூரும் பசிபிக் நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படும் வகையில் ஆசியான் மற்றும் பசிபிக் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது,” என்றும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

தமது பயணத்தின்போது, குக் தீவுகளின் பிரதமர் மார்க் பிரவுன், ஃபிஜி நாட்டின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் சகியாசி டிடோகா, நவ்ரு நாட்டின் மகளிர் மற்றும் சமூக மேம்பாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் சார்மைன் ஸ்காட்டி உள்ளிட்ட பசிபிக் தலைவர்களைச் சந்தித்து டாக்டர் விவியன் பேச்சுவார்த்தை நடத்தினாா்.

குறிப்புச் சொற்கள்