சிறிய, உருண்டை வடிவிலான ‘ஸ்டிக்கி கேண்டி’, முழுமையான திராட்சை போன்றவை குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மார்ச் 31ஆம் தேதி சிங்கப்பூர் உணவு நிலையம் எச்சரித்தது.
இத்தகைய உணவுப் பொருள்களை குழந்தைகளுக்கு வழங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அது பெற்றோரைக் கேட்டுக் கொண்டது.
மலேசியாவில் ‘ஐபால்’ என்ற கண்ணைப் போன்று தோற்றமுடைய ஜவ்வு மிட்டாயைச் சாப்பிட்டு குழந்தை இறந்துவிட்டது. அதே போன்ற ஜவ்வு மிட்டாய்கள் இணையத் தளங்களில் விற்கப்படுவதைத் தொடர்ந்து உணவு நிலையத்தின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
பருப்பு வகைகள், பாப்கார்ன், நாணயங்கள், கோலி போன்றவையும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடியவை என்று மனிதவள அமைச்சின் ஹெல்த்ஹப் தகவல் தெரிவிக்கிறது.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக அந்த தளம் தெரிவித்துள்ளது. ஏனெனில், குழந்தைகள் இயற்கையாகவே தங்கள் வாயில் பொருள்களை வைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 18ஆம் தேதி பினாங்கில் உள்ள பட்டர்வொர்த் பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவர் ஒருவர், மேசைப் பந்து அளவிலான ஜவ்வு மிட்டாயைச் சாப்பிட்டு சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அவசரகால ஊழியர்கள் சிறுவனின் வாயிலிருந்து இனிப்பை அகற்றினாலும் கோமாவில் வீழ்ந்த அவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இதையடுத்து மலேசிய சுகாதார அமைச்சு பிப்ரவரி மாதம் அத்தகைய மிட்டாய்களை விற்கத் தடை விதித்தது. இணையத் தளங்களில் அத்தகைய மிட்டாய்களின் விளம்பரங்களை அகற்றவும் அமைச்சு உத்தரவிட்டது.