தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போட்டி, பூசல் நிலவும் உலகில் சிறிய நாடுகள் கைகோப்பது அவசியம்: வோங்

2 mins read
4fcaae45-5fda-4244-a72b-184281c51ac4
பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போட்டியும் பூசலும் நிலவும் காலத்தில் பன்முகத்தன்மையை நிலைநாட்ட சிறிய நாடுகள் கைகோப்பது அவசியம் என்றும் அதற்கான முயற்சிகளை அவை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், அனைத்துலக சட்டத்தின் கொள்கைகளை சிறிய நாடுகள் தற்காக்க வேண்டும் என்றும் அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) கூறினார்,

நியூயார்க்கைச் சேர்ந்த அனைத்துலக அமைதி நிறுவனமும் சிங்கப்பூரின் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வு நிலையமும் இணைந்து தயாரித்துள்ள ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் திரு வோங்கின் பதிவு செய்யப்பட்ட உரை ஒலிபரப்பப்பட்டது.

‘சிறிய நாடுகளும் பன்முகத்தன்மையின் வருங்காலமும்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் பன்முகத்தன்மைக்கான முன்னுரிமைகளையும் சவால்களையும் சிறிய நாடுகளின் பார்வையில் படம்பிடித்துக் காட்டுகிறது.

ஐநா பொதுச் சபை உயர்மட்ட வாரத்தின் 79வது அமர்வின் தொடர்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. மாறிவரும் உலகச்சூழலில் சிறிய நாடுகள் எவ்வாறு தங்களது தன்னாட்சி உரிமையை அதிகரிக்கலாம் என்பதற்கான பல உதாரணங்களை அந்த அறிக்கை உள்ளடக்கி உள்ளது.

திரு வோங் தமது உரையில், “அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையிலான, ஆற்றல்மிக்க பன்முகத்தன்மை சிறிய நாடுகளுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் பலனளிக்கக்கூடியது,” என்றார்.

“நாடுகளை சரிசமமாக நடத்தும் விதிகளை உள்ளடக்கிய ஒழுங்குமுறை இல்லாவிட்டால், சிறிய நாடுகளுக்கான ஆபத்துகள் வேகமாக அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலையில், தனக்கு வேண்டியதை தானே எடுத்துக்கொள்ளக்கூடிய, அதிகாரமே நீதியை ஆளக்கூடிய ஆபத்தான உலகை நோக்கி இறங்கக்கூடிய அபாயத்தை நாம் எதிர்கொள்வோம்.

“சிறிய நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய ஆட்சியுரிமை, நிலப்பகுதிகளுக்கு இடையிலான ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் ஆகியன தொடர்பான கொள்கைகளை இப்படிப்பட்ட நிலைமை கீழறுத்துவிடும்,” என்று திரு வோங் விளக்கினார்.

தொடர்புடைய செய்திகள்

சிறிய நாடுகளுக்கு அதிக ஆபத்து நிறைந்ததாக உலகம் மாறி வருகிறது என்று குறிப்பிட்ட அவர், அதிகாரம் படைத்த நாடுகள் ஆதிக்கம் செலுத்தவும் செல்வாக்கை நிலைநாட்டவும் போட்டியிட்டு வருவதாகக் கூறினார்.

ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் சிறிய நாடுகள் தங்களது ஒட்டுமொத்த குரலை ஒலிக்கச் செய்யவும் செல்வாக்கை உயர்த்தவும் முடியும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்