சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசாங்க ஊழியரான திருவாட்டி கோ ஹன்யான் பதவி விலகியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகக் கூறப்படுகிறது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டின் அறிவார்ந்த தேச உத்திகள் அலுவலகம், கொள்கைகள், உத்திமுறைப் பிரிவுக்கான தேசிய செயற்கை நுண்ணறிவுக் குழுவின் இயக்குநரான திருவாட்டி கோ, ஏப்ரல் 3ஆம் தேதி வரை அப்பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு திருவாட்டி கோவையும் சேர்த்து அரசாங்க உயர் அதிகாரிகள் மூவர் பதவி விலகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் துணைச் செயலாளர் ஜாஸ்மின் லாவ், போக்குவரத்து அமைச்சில் இயக்குநராக இருந்த திரு ஃபூ சீஸியாங் ஆகியோரும் பதவி விலகினர்.
அறிவார்ந்த தேசம் 2.0 என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் புதுப்பிக்கப்பட்ட அறிவார்ந்த தேசத் திட்டத்தை வடிவமைப்பதில் திருவாட்டி கோவுக்கும் பங்குண்டு.
அதுமட்டுமல்லாது, சிங்கப்பூரின் புதுப்பிக்கப்பட்ட தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தியை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தவும் அவர் உதவினார்.
இதற்கு முன்னதாக அவர் பிரதமர் அலுவலகத்தின் பொருளியல், நீடித்த நிலைத்தன்மை உத்திப் பிரிவில் பணியாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் மேம்பாட்டுக் கழகத்திலும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உள்ளது.
பொதுச் சேவைத் தலைவர்களை மக்கள் செயல் கட்சி தனது தேர்தல் வேட்பாளர்களாகக் களமிறக்குவது புதிதல்ல.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசாங்க ஊழியர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்க ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் திரு டான் கியட் ஹாவ்.
தேர்தலுக்கு முன்பு அவர் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்தார்.
திரு டான், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகினார்.

