அறிவார்ந்த மறுசுழற்சிப் பெட்டிகள், பெட்டகங்கள் மேலும் 83 இடங்களில்

அறிவார்ந்த மறுசுழற்சிப் பெட்டிகள், பெட்டகங்கள் மேலும் 83 இடங்களில்

2 mins read
503809b2-2eb3-4aca-9758-6d784df2ab1a
பீஷான், புளோக் 125ல் வைக்கப்பட்டுள்ள அறிவார்ந்த மறுசுழற்சிப் பெட்டிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மறுசுழற்சிப் பொருள்களையும் உணவுக் கழிவுகளையும் சேகரிக்க அறிவார்ந்த மறுசுழற்சிப் பெட்டிகளையும் பெட்டகங்களையும் பயன்படுத்தும் முறை, ஜனவரி 1ஆம் தேதிக்குள் சிங்கப்பூரில் மேலும் 83 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

முன்னதாக, பீஷானிலும் சின் மிங்கிலும் அதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

அந்த முறையை அறிமுகப்படுத்திய உள்ளூர்க் கழிவு நிறுவனமான ‘800 சூப்பர்’, தாள்கள், பிளாஸ்டிக், அலுமினியம், கண்ணாடி, துணிமணிகள் உள்ளிட்டவற்றைச் சேகரிக்கிறது.

இவற்றைத் தனித்தனியாகப் பெட்டிகளில் போடும் குடியிருப்பாளர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். அந்தப் புள்ளிகளைக் கொண்டு, செயலி ஒன்றின் மூலம் ‘ஃபேர்பிரைஸ்’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அறிவார்ந்த மறுசுழற்சிப் பெட்டிகளுடன், உணவுக் கழிவு மறுசுழற்சிப் பெட்டகம் ஒன்றும் சோதிக்கப்பட்டது. பயனீட்டாளர்கள் பழத் தோல், மீன், இறைச்சித் துண்டுகள் போன்றவற்றை, கொடுக்கப்படும் காற்றுப்புகா பெட்டிகளில் வைத்து, அவற்றின் எடையை எடுத்து பெட்டகத்தில் வைக்கலாம்.

சுற்றுப்புறத் தீர்வுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற ‘800 சூப்பர்’, அந்த அறிவார்ந்த பெட்டிகளையும் பெட்டகங்களையும், அங் மோ கியோ, தோ பாயோ ஆகிய புதிய இடங்களில் பொருத்தத் திட்டமிடுகிறது.

அது முதன் முதலில் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பீஷானிலும் சிங் மிங்கிலும் உள்ள பத்து இடங்களில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

மே மாத நிலவரப்படி, அந்தப் பத்து இடங்களில் ஏறக்குறைய 2,000 பயனீட்டாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

முதற்கட்ட அறிவார்ந்த பெட்டிகளையும் பெட்டகங்களையும் கட்டங்கட்டமாக மாற்றி, புதியவை பொருத்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி மில்டன் இங் கூறினார்.

அதோடு, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் செயலியும் மாற்றப்படும் என்றார் அவர்.

சேகரிக்கப்பட்ட மறுசுழற்சிப் பொருள்களின் மாசுக்கலப்பு விகிதத்தை 10 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளது அந்த நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்