முதிய நோயாளிகள் மருத்துவமனைப் படுக்கையில் இருந்து எழுந்து கீழே விழுமுன் சில நொடிகளிலேயே அவர்களைச் சென்றடைவது, நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுக்குத் தெரிவிக்க கையில் பிடிக்க தேவையில்லாத கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் ஏற்கெனவே சிங்கப்பூர் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளன.
மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் மூப்படையும் மக்கள்தொகையைக் கவனிக்கவும் இங்குள்ள மருத்துவ நிலையங்கள் அறிவார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
எடுத்துக்காட்டாக, டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள ‘அறிவார்ந்த’ உள்நோயாளி சிகிச்சைப் பிரிவில் (smart ward) பணிபுரிவோர் தாங்கள் வேலைசெய்யும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவும், முதிய நோயாளிகளைக் கவனிக்கவும் மின்னிலக்கமயமாதல், இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
‘அறிவார்ந்த’ பிரிவில் அத்தகைய சாதனங்களும் தானியக்கக் கருவிகளும் இருப்பதால் சேவைகள் மேம்பட்டுள்ளதோடு, குறைவான எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர்களின் சுமையும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களால் மேலும் பயன்மிக்க வகையில் செயல்படவும் தங்களது திறன்களை மேம்படுத்தவும் முடிகிறது.

