தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களின் கைப்பேசி விளையாட்டு மோகம் கூடியதற்குத் திறன்பேசிகள் காரணம்: ஆலோசகர்கள்

2 mins read
விளையாட்டுகளின் கவர்ந்திழுக்கும் தன்மையும் காரணம் என்கின்றனர்
bc7adfb7-bd99-4294-9ee1-1d7a389953f5
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டம் முதல் கைப்பேசி விளையாட்டு மோகம் 30 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இளையர்கள் என்றும் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்திருப்பதற்கு அந்த விளையாட்டுகளின் கவர்ந்திழுக்கும் தன்மையும் திறன்பேசிகளும் காரணம் என்று சிகிச்சையாளர்களும் ஆலோசகர்களும் கூறியுள்ளனர்.

‘வீ கேர் கம்யூனிட்டி சர்விசஸ்’ எனும் மறுவாழ்வு நிலையத்தின் ஆலோசகர் சாய் பின்ஹுவா, 2019ஆம் ஆண்டு முதல் காணொளி விளையாட்டுகள், விளையாட்டுக் கருவிகள் மீதான மோகம் தொடர்பில் உதவி நாடுவோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்திருப்பதாக ‘சிஎன்ஏ’விடம் கூறினார்.

உதவி கேட்டு தங்கள் நிலையத்தை நாடுவோரில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இளையர்கள் என்றார் அவர்.

‘த தெரெபி ரூம்’ சிகிச்சை நிலையத்தில் முதன்மை உளவியல் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஜெரல்டின் டான், “கொவிட்-19க்கு முன்பு, பெற்றோரில் 50 முதல் 60 விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகள் மின்னணுக் கருவிகளில் கூடுதல் நேரம் செலவிடுவதாகக் கூறி உதவி நாடுவர். இப்போது அந்த விகிதம் 70 முதல் 80 விழுக்காடாகியுள்ளது,” என்றார்.

தனிமைப்படுத்திக்கொள்ளல், பள்ளி அல்லது வேலையைப் புறக்கணித்தல், சமூக, குடும்ப நடவடிக்கைகளில் பங்கேற்க மறுத்தல் ஆகியவை கைப்பேசி விளையாட்டு மோகம் தீவிரமடைந்திருப்பதன் அறிகுறிகளாகக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து கருவிகளைப் பறித்துக்கொள்வதைவிட அக்கருவிகளின் திரையில் அவர்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது என்றார் உளவியல் சிகிச்சையாளர் நரசிம்மன் திவசிகா மணி. கருவிகளைப் பறித்துக்கொண்டால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்றார் அவர்.

இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளான சிலருக்கு ‘ஏடிஎச்டி’ எனப்படும் கவனக் குறைபாடு, மிகை இயக்கக் குறைபாடு, ‘ஆட்டிஸம்’ எனப்படும் மதியிறுக்கக் குறைபாடு, மன அழுத்தம், கவலை போன்ற பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்படாமல் இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

கைப்பேசி விளையாட்டு மோகத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்த விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பது முக்கியம் என்று அவர்கள் கூறினர்.

கைப்பேசி விளையாட்டு மோகம் தொடர்பில் உதவி நாடும் இளையர்கள் ‘ரீச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ உள்ளிட்ட சமூக சேவை நிலையங்களையோ ஆலோசனை நிலையங்களையோ நாடலாம்.

குறிப்புச் சொற்கள்