தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பொலிவு பெறவிருக்கிறது ஸ்மித் ஸ்திரீட்

2 mins read
b891d3f8-1184-4173-bf93-399daa74dbb9
ஸ்மித் ஸ்திரீட்டிற்குப் புதுப்பொலிவூட்டும் நடவடிக்கைகளைச் சைனாடவுன் வர்த்தகர் சங்கம் மேற்கொள்ளும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சைனாடவுன் வட்டாரத்திலுள்ள ஸ்மித் ஸ்திரீட்டிற்குப் புதுப்பொலிவூட்டும் பணிக்கான குத்தகை சைனாடவுன் வர்த்தகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நில ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவை ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தக் குத்தகையை வழங்கின.

இதன்கீழ், ஸ்மித் ஸ்திரீட்டின் கதவிலக்கம் 11 முதல் 37 வரையிலான கடைவீடுகளும் அதற்கு அருகில் உள்ள அரசாங்க நிலத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதியும் புதுமெருகு பெறவிருக்கின்றன. சிங்கப்பூர் நில ஆணையம் ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஃபேஸ்புக்கில் இதுகுறித்துப் பதிவிட்டது.

சைனாடவுன் வட்டாரத்தின் கலாசார, கட்டடக்கலை மரபுடைமையைக் கட்டிக்காத்து, கொண்டாடும் வகையில் அங்கு புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மொத்தம் 34,076 சதுர அடி பரப்பிலான நிலப்பகுதி புதுப்பிக்கப்படவிருக்கிறது.

புதுப்பிப்புப் பணிகளுக்காக சைனாடவுன் வர்த்தகர் சங்கத்திற்கு ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அது மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

புதுப்பிக்கப்பட்ட பிறகு அங்கு இடம்பெறவிருக்கும் அம்சங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று சங்கம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

இதற்கான ஏலக் குத்தகை சென்ற ஆண்டு (2023) நவம்பர் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் இந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சைனாடவுன் வர்த்தகர் சங்கத்திற்கு $123,000க்கு இந்தக் குத்தகை வழங்கப்பட்டது.

மற்ற நிறுவனங்கள் $53,000 முதல் $180,000 வரை ஏலத்தொகையாகக் குறிப்பிட்டிருந்தன.

சைனாடவுன் வர்த்தகர் சங்கத்தின் கருப்பொருள், மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை உள்ளூர்ச் சீன மரபுடைமையை ஊக்குவிக்கும் விதமாகவும் அந்த வட்டாரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.

இச்சங்கத்தில் சைனாடவுன் வர்த்தகர்கள், அடித்தளத் தலைவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது என்பதால் சிங்கப்பூரின் தனித்துவமான உணவு, பானங்களையும் அனைத்துலக உணவு வகைகளையும் ஸ்மித் ஸ்திரீட்டில் விற்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று சங்கம் கூறியது.

ஸ்மித் ஸ்திரீட்டில் 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘சைனாடவுன் உணவு வீதி’ கொவிட்-19 கிருமிப் பரவலின்போது 2021ஆம் ஆண்டு அக்டோபரில் மூடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்