சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்றதாகக் கூறி மலேசிய ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோபி தயாநிதி என்ற அவர், வியாழக்கிழமை (செப்டம்பர் 18) உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்தார்.
லாரியில் வந்த கோபியை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, அவரது லாரியிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 3,450 மெல்லும் புகையிலைப் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சோதனைச்சாவடி அதிகாரிகள் சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
38 வயது கோபிமீதான வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோபிமீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.