ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முதல் நாள் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்குக் கூடுதல் நேரம் சேவை வழங்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் சேவைகளும் பேருந்துச் சேவைகளும் கூடுதல் நேரம் செயல்படும் என்று அது கூறியது.
வடக்கு-தெற்கு ரயில் தடம், கிழக்கு-மேற்கு ரயில் தடம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகியவற்றில் ரயில்கள் ஜூன் 17ஆம் தேதி அதிகாலை வரை சேவை வழங்கும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உட்லண்ட்ஸ் நார்த்திலிருந்து கரையோரப் பூந்தோட்டம் செல்லும் இறுதி ரயில் அதிகாலை 12.12 மணிக்குக் கிளம்பும் என்றும் எதிர்த்திசையில் அது 12.29 மணிக்குக் கிளம்பும் என்றும் கூறப்பட்டது.
சிட்டி ஹால் ரயில் நிலையத்திலிருந்து வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்குப் பாதைகளில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங் ஆகிய நிலையங்களுக்குச் செல்லும் இறுதி ரயில்கள் அதிகாலை 12.30 மணிக்குக் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.
வட்டப் பாதையிலும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும்.
டோபி காட்டிலிருந்து ஹார்பர் ஃபிரண்ட் செல்லும் இறுதி ரயில் ஜூன் 16ஆம் தேதி இரவு 11.55 மணிக்குக் கிளம்பும். எதிர்த்திசையில் ஹார்பர் ஃபிரண்டிலிருந்து இறுதி ரயில் 11.30 மணிக்குக் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில், சாங்கி விமான நிலைய ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்படமாட்டாது.
மேலும், சுவா சூ காங் பேருந்து முனையம், உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து முனையம், புக்கிட் பாஞ்சாங் பேருந்து முனையம் ஆகியவற்றிலிருந்து கிளம்பும் 13 பேருந்துச் சேவைகள் கூடுதல் நேரம் சேவை வழங்குமெனத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துச் சேவைகள் 300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A ஆகியவை அவை.
மேல்விவரங்களுக்கு எஸ்எம் ஆர்டியின் இணையத்தளத்தையோ காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை 1800 336 8900 என்ற தொலைபேசி எண்ணையோ நாடலாம்.