எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு $3 மில்லியன் அபராதம்

2 mins read
b7274be8-05d7-49ef-852c-5e949b30bcec
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ரயில் சேவைத் தடை காரணமாகப் பயணிகள் ரயிலிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஏறத்தாழ 850 பயணிகள் தண்டவாளம் வழியாக கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். - படம்: எஸ்எம்ஆர்டி/ஃபேஸ்புக்

எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு $3 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தெரிவித்தது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட ஆறு நாள் ரயில் சேவைத் தடைக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த ரயில் சேவை மிகவும் மோசமாக இருந்ததாகவும் அதற்கு ஏற்றவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையம் கூறியது.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு ஏற்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்கான செலவுகள், பாதிப்புக்குள்ளான எம்ஆர்டி நிலையங்களில் பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கியதற்கான செலவுகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரயில் சேவைத் தடையின்போது ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்துக்கும் புவனா விஸ்டா எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவைகள் முடங்கின.

சேவைத் தடை தொடர்பான விசாரணை பல மாதங்கள் நீடித்தது.

விசாரணை மூலம் கிடைத்த கண்டுபிடிப்புகளை ஆணையம் வெளியிட்டது.

பழுதடைந்த ரயிலின் அடிப்பாகத்தின் ஒரு பகுதி விழுந்ததற்குப் பழைய எண்ணெய்ப் பசை காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று ஆணையம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ரயிலை உலு பாண்டான் பணிமனைக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது டோவர் எம்ஆர்டி நிலையம் அருகில் அதன் ஒரு பகுதி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக ரயிலின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பகுதி தண்டவாளத்துக்கு வெளியே சென்றது.

இருப்பினும், அந்த ரயிலால் தொடர்ந்து செல்ல முடிந்தது.

ஆனால், 2.55 கிலோ மீட்டர் தண்டவாளமும் மின்சார வடங்கள் போன்றவையும் சேதமடைந்தன.

ரயிலின் அச்சுப் பெட்டியில் உள்ள அச்சு தாங்கு உருளைகளை மசகிடும் எண்ணெய்ப் பசையின் தரம் குறைந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என ஆணையம் கூறியது.

மசகிடும் தன்மையை எண்ணெய்ப் பசை இழக்கும்போது அச்சு தாங்கு உருள்கள் தேய்ந்து போகும் சாத்தியம் அதிகமாகிறது. இதன் காரணமாக அது அளவுக்கு அதிகமாக சூடாகிவிடும்.

பழுதடைந்த ரயில் முதல் தலைமுறை கவாசாக்கி ஹேவி இன்டஸ்டிரிஸ் ரகத்தைச் சேர்ந்தது.

இந்த ரக ரயில்கள் படிப்படியாக மாற்றப்படுகின்றன.

அவற்றுக்குப் பதிலாகப் புதிய ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பழுதடைந்த ரயில் ஆகக் கடைசியாக 2024ஆம் ஆண்டு ஜூலை 15லும் செப்டம்பர் 10லும் பராமரிப்புப் பணிகளுக்கு உட்பட்டது.

அப்போது அதில் குறை ஏதும் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்