12 வயதுச் சிறுவனால் ரயில் சேவை தாமதமானதாகப் புகார்

12 வயதுச் சிறுவனால் ரயில் சேவை தாமதமானதாகப் புகார்

1 mins read
f626b6a0-d22b-4a7b-853b-1d8371712d33
அச்சிறுவன் ஒரு பொருளை இடையில் வைத்து, நடைமேடைத் தடுப்புக் கதவுகளை முழுமையாக மூடவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. கோப்புப்படம்: சாவ் பாவ் -

நடைமேடைத் தடுப்புக் கதவை (platform screen door) மூடவிடாமல் 12 வயதுச் சிறுவன் வேண்டுமென்றே தடுத்ததால் ரயில் சேவை தாமதமானதாகக் கூறி, எஸ்எம்ஆர்டி நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

"சென்ற மாதம் 28ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தில், கிழக்கு நோக்கிச் செல்லும் ரயில்களுக்கான நடைமேடையில் பயணி ஒருவர் வேண்டுமென்றே நடைமேடைத் தடுப்புக் கதவை மூடவிடாமல் தடுத்தார். இதுகுறித்துக் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்," என்று எஸ்எம்ஆர்டி தலைவர் லாம் ஷியாவ் கவ் தெரிவித்தார்.

இத்தகைய பொறுப்பற்ற நடத்தையால் சம்பந்தப்பட்ட பயணிக்கு ஆபத்து நேரலாம் என்பதோடு, ரயில் சேவை தாமதமாகி, பயணிகள் பலரும் பாதிக்கப்படலாம் என்பதாலும், அத்தகைய செய்கையை எஸ்எம்ஆர்டி கடுமையாகக் கருதுகிறது என்றும் திரு லாம் குறிப்பிட்டார்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில் மற்றும் நடைமேடைத் தடுப்புக் கதவுகள் மூடும்போது அவற்றைத் தடுக்கக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

சம்பவம் தொடர்பான காணொளி யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், உலோகக் குடுவை போன்று தெரியும் ஒரு பொருளை இடையில் வைத்து, நடைமேடைத் தடுப்புக் கதவுகளை முழுவதும் மூடவிடாமல் அவன் தடுப்பது தெரிகிறது. அக்கதவுகள் பின்னர் மூடியதும் அதனை அடுத்திருந்த கதவுகள் திறந்தவாறு இருந்ததும் அந்த இரண்டு நிமிடக் காணொளியில் தெரிகிறது.