‘எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ்’ ரயில் சேவை நிறுவனத்தின் வரிகளுக்குப் பிந்தைய லாபம், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட இரட்டிப்பாகி $12.8 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டில், அது $6.9 மில்லியனாகப் பதிவானது.
அதன் நிகர லாப வரம்பளவு 1.3 விழுக்காடாக இருந்தது. 2024/2025ஆம் நிதியாண்டில் அது 0.75 விழுக்காடாகப் பதிவானது.
2024ஆம் ஆண்டில் செப்டம்பர் 25 முதல் 30 வரை கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட பெரிய அளவிலான தடங்கலால் அன்றாடம் ஆறில் ஒரு ரயில் பயணம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட $10 மில்லியன் மதிப்பிலான செலவினங்களால் அதன் லாப வரம்பு அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
2025/2026ஆம் நிதியாண்டில், தெமாசெக் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தத் துணை நிறுவனத்தின் ரயில் சேவைகளிலிருந்து கிடைத்த வருவாய் $969.7 மில்லியனை எட்டியது. அது முந்தைய நிதியாண்டில் பதிவான $918.2 மில்லியனைவிட 5.6 விழுக்காடு அதிகம்.
அதற்கு அதிகமான பயணிகள் எண்ணிக்கையும் கட்டண உயர்வுமே முக்கியக் காரணம் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 5 விழுக்காடு உயர்ந்தது. அதன் காரணமாகப் பயணக் கட்டணம், தூரத்தைப் பொறுத்து ஒன்பது முதல் 10 காசு வரை அதிகரித்துள்ளது.


