எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

2 mins read
e9086fb9-b8cc-4fb6-ab9b-021444445269
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் பீஷான் பணிமனையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது உயிரிழந்தார். - கோப்புப் படம்: எஸ்எம்ஆர்டி

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பீஷான் பணிமனையில் பணிபுரிந்தபோது,தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கடுமையாகக் காயமுற்று, பின்னர் மரணமடைந்ததன் தொடர்பில் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நாள் அல்லது அதற்கு முந்திய நாளன்று, பணிமனையில் தன் ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்கான ஒரு குற்றச்சாட்டை அந்நிறுவனம் எதிர்நோக்குகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு திரு முகம்மது அஃபிக் செனாவியின் உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, 2020 மார்ச் 23ஆம் தேதி, அவர் நீர்ம அழுத்த இயந்திரத்தை இயக்கியபோது உலோகத் தண்டு ஒன்று அவரது முகத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு அஃபிக், 30, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும், அன்று காலை பின்னேரத்தில் அவர் உயிரிழந்தார்.

நீர்ம அழுத்த இயந்திரங்கள் தொழில்துறை சார்ந்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கார்களை நசுக்கக்கூடிய ஆற்றல் அவற்றுக்கு உண்டு.

எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனம் பழுதுபார்ப்புக்காக அந்த இயந்திரத்தைக் கழற்றிய பிறகு அதற்குக் காற்றழுத்தக் கருவியைப் பொருத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது என்று ஆக அண்மைய நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

ஊழியர்கள் அந்த இயந்திரத்திற்கு அருகில் செல்லாமல் இருப்பதைத் தவிர்க்க, பாதுகாப்பான தூர இடைவெளிக்கான வரையறையைக் குறிக்கவும், இயந்திரத்தின் அதிகபட்சக் காற்றழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும் அது தவறியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வழக்கு வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்