எஸ்எம்ஆர்டி நிறுவனம், 2030களின் நடுப்பகுதிக்குள் 92 ரயில்களை மேம்படுத்தவிருக்கிறது.
சிங்கப்பூரின் பழைமையான, சுறுசுறுப்பான பெருவிரைவுப் போக்குவரத்துத் தடங்களில் இயங்கும் அவை, புதிய கட்டமைப்புகளுடன் மெருகேற்றப்படும். உத்தேசக் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தடைகள் ஏற்படுவதைக் குறைக்க அவை உதவக்கூடும் என்று நம்பப்படுகிறது.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்குத் தடங்களில் 198 ரயில்கள் செயல்படுகின்றன. அந்த ரயில்களில் பாதிக்கும் சற்றுக் குறைவானவற்றில் நவீனக் கட்டமைப்புகள் பொருத்தப்படும். அதனால், ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும் சுமுகமாகவும் மேலும் வசதியாகவும் இருக்கும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. வியாழக்கிழமை (டிசம்பர் 18) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தகைய முறையில் மேம்படுத்தப்படவுள்ள முதல் ரயிலில் சீன ரயில் உற்பத்தி நிறுவனமான சிஆர்ஆர்சி சிஃபாங் ஏற்கெனவே நவீனக் கட்டமைப்புகளைப் பொருத்திவிட்டது. ஐந்தாம் தலைமுறை சி151பி (C151B) ரகத்தைச் சேர்ந்த அந்த ரயில் 2017ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இருக்கிறது.
சோதனைக்காக அது அக்டோபர் மாதம் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை ரயில் மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். பின்னர் ஜூன் மாதம், பயணிகள் சேவையில் ரயில்கள் ஈடுபடுத்தப்படும்.
புதிய கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக அந்த ரயில் அமையும். எதிர்பார்த்த அளவுக்கு அது இயங்கினால், மற்ற நான்காம், ஐந்தாம், ஆறாம் தலைமுறை ரயில்களிலும் புதிய கட்டமைப்புகள் பொருத்தப்படும். ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட 15 ஆண்டு நிறைவுற்ற நிலையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
மெருகேற்றப்படவுள்ள 92 ரயில்களில் 35, நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. 45, ஐந்தாம் தலைமுறையையும் 12, ஆறாம் தலைமுறையையும் சேர்ந்த ரயில்கள்.
எஞ்சியவை ஏழாம் தலைமுறை ரயில்கள். அவற்றில் 78 தற்போது சேவையில் உள்ளன. மேலும் 28 இனி வரவிருக்கின்றன அல்லது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நான்காம் தலைமுறை ரயில்கள், 2011ஆம் ஆண்டிலிருந்து இயங்குகின்றன. ஆறாம் தலைமுறை ரயில்கள், 2018ல் செயல்படத் தொடங்கின. ஏழாம் தலைமுறை ரயில்கள் முதன்முதலில் 2023ல் சேவையில் சேர்ந்தன.
மெருகேற்றப்படும் ரயில்களில் குளிர்சாதன வசதிகளும் காற்றோட்டமும் முன்பைவிடச் சிறப்பாக இருக்கும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. அவை பயணிகளுக்குக் கூடுதல் வசதியாக இருக்கும் என்பதோடு எரிசக்தியைத் திறம்படப் பயன்படுத்தவும் கைகொடுக்கும் என்று கூறப்பட்டது.
ரயிலில் பொருத்தப்படும் புதிய உணர்கருவிகள், கோளாறு ஏற்படுவதற்கு முன்னரே அதற்கான அறிகுறிகளை அடையாளங்காண உதவும்.
மேம்பாட்டுப் பணிகளின்போது ஏறக்குறைய 180 புதிய உணர்கருவிகள் இணைக்கப்பட்டன. ஏற்கெனவே அத்தகைய 300 உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலானவை ரயில்களின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். பயணிகளால் அவற்றைப் பார்க்க முடியாது. கோளாற்றால் தாமதமும் சேதமும் ஏற்படுவதை முன்கூட்டியே தலையிட்டுத் தவிர்ப்பது நோக்கம்.
பீஷான் பணிமனையில் செய்தியாளர்கள், புதிய கட்டமைப்புகள் பொருத்தப்பட்ட முதல் ரயிலை வியாழக்கிழமை பார்வையிட்டனர். பணிமனைக்குள் இருக்கும் சோதனைத் தடத்தில் இயக்கப்பட்ட அந்த ரயிலில் அவர்கள் பயணம் செய்து நேரடி அனுபவத்தையும் பெற்றனர்.

