உடனடி நூடல்ஸ் பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள்; சுங்கத் துறை விசாரணை

உடனடி நூடல்ஸ் பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள்; சுங்கத் துறை விசாரணை

1 mins read
4df15962-c0ad-447f-a381-d496199d1919
சாங்கி விமானச் சரக்கு நிலையத்தில் 9,300க்கும் அதிகமான தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. - படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

சாங்கி விமானச் சரக்கு நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 9,300க்கும் அதிகமான தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்தச் சிகரெட்டுகள் உடனடி நூடல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.

ஒருங்கிணைந்த இலக்கு நிலையம் அளித்த தகவலின்படி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (மே 21) தெரிவிக்கப்பட்டது.

சந்தேகத்திற்குரிய சரக்கு ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்யும் இயந்திரத்துக்கு அனுப்பிவைத்தனர்.

சோதனை செய்யப்பட்ட பெட்டிக்குள் உடனடி நூடல்ஸ் இருந்தது. ஆனால், திரையில் கண்ட படங்கள் அதற்கு முரணாக இருந்தன. கூடுதல் விசாரணை மூலம் அந்தப் பொட்டலங்களுக்குள் தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கூடுதல் விசாரணைக்காக அந்தப் பெட்டிகள் சிங்கப்பூர்ச் சுங்கத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சிங்கப்பூரில் கள்ள மின்சிகரெட்டுகளை வாங்குவதோ, விற்பதோ, விநியோகம் செய்வதோ, வைத்திருப்பதோ சட்டவிரோதம். அத்தகைய குற்றங்களுக்குச் செலுத்தப்படாத தீர்வையைவிட 40 மடங்குக் கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

குற்றம் புரிந்தோருக்கு ஆறு ஆண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

உணவுப் பொட்டலங்களில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவங்கள் இதற்குமுன் நிகழ்ந்துள்ளதாகவும் சிங்கப்பூர்ச் சுங்கத் துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்