மின்சிகரெட், சட்டவிரோதப் பொருள்கள் கடத்தல்: மலேசியருக்குச் சிறை

மின்சிகரெட், சட்டவிரோதப் பொருள்கள் கடத்தல்: மலேசியருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2026 - 10:04 am

1 mins read

மின்சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 சட்டவிரோதப் பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த குற்றத்துக்காக ஜெகதீஸ்வரன் நாகலிங்கம், 28, எனும் மலேசிய ஆடவருக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) 22 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கடத்திவந்த சட்டவிரோதப் பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $277,000 என்று தெரிவிக்கப்பட்டது.

14,700 மின்சிகரெட்டுகள் உட்பட சட்டவிரோதப் பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

புகையிலையைச் சூடேற்றும் கருவிகள் வைத்திருந்தது உட்பட இரண்டு இதரக் குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்டன.

மலேசியாவின் தளவாட நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்த அந்த ஆடவர், பணத்திற்குச் சிரமம் இருந்ததால் தமது அதிகாரியிடம் கடன் கேட்டுள்ளார். ‘டேவிட்’ எனும் பெயர் கொண்ட அந்த அதிகாரி சிங்கப்பூருக்குச் சில சட்டவிரோதப் பொருள்களைக் கொண்டுசென்றால் பணம் தருவதாகக் கூறினார். ஆனால், அந்தப் பொருள்கள் பற்றிய மேல்விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இவ்வாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஜெகதீஸ்வரன் லாரி ஒன்றைத் துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கி ஓட்டி வந்தபோது அதிகாரிகள் அந்த லாரியைச் சோதனை செய்தனர். சட்டவிரோதப் பொருள்கள் அதிலிருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது அந்த விவரங்கள் வெளியாயின.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்சிறைகைது