தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரில் மின்சிகரெட்டுகள் கடத்தல்; இருவர் கைது

2 mins read
24514993-c676-4c06-a3d6-8af418672ada
காருக்குள் பதுக்கி வைக்கப்பட்ட மின் சிகரெட்டுகள். - படங்கள்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஃபேஸ்புக்

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் தொடர்பான பொருள்களைக் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 41 வயது பெண் ஓட்டுநர் மற்றும் அவரது 43 வயது ஆண் பயணி கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 25 அன்று அவர்கள் பயணம் செய்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் 398 மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை இடம்பெற்றதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஐசிஏ அதிகாரிகள், வாகனத்தைக் கூடுதல் சோதனைக்கு அனுப்பினர்.

அப்போது மின்சிகரெட்டுகள் காரின் மாற்றியமைக்கப்பட்ட பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது என்று அது கூறியது.

இந்தச் சம்பவம் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஏ தெரிவித்தது.

மின்சிகரெட் மற்றும் அவற்றின் துணைக்கருவிகளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் அல்லது வழங்குதல் ஆகியவை தொடர்பான முதல் குற்றத்தில் $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தைப் புரிவோருக்கு $20,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

செப்டம்பர் 1 முதல் மின்சிகரெட்டைத் தடை செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன.

அதன் பிறகு, மின்சிகரெட்டுகள் அல்லது எட்டோமிடேட் நிரப்பப்பட்ட மின்சிகரெட்டுகளை விநியோகிப்பவர்களுக்கு 15 பிரம்படி மற்றும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

முதல் முறையாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குற்றவாளிகளுக்கு $700 அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாகக் குற்றம் புரிவோர் மறுவாழ்வுப் பயிற்சி பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்படும். மூன்றாவது முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறையாக மின்சிகரெட்களைப் பயன்படுத்துவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்