தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பத்தின் கார் பயணத்தில் கூடவே வந்த பாம்பு

1 mins read
0e7b5f44-1b0f-4b9e-9786-728b1a08833a
இணையவாசிகளிடையே மாறுபட்ட உணர்வுகளை இந்தப் பாம்புச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. - படம்: ஃபேஸ்புக்

ஒரு குடும்பம் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்குத் துணையாக பாம்பு ஒன்றும் சென்றது.

காரின் இயந்திர மேல் மூடி, முன்புறக் கண்ணாடி ஆகியவற்றில் தோன்றி, வாகனம் நின்றதும் ஓட்டுநர் பக்கம் இருந்த கண்ணாடிக்கு பாம்பு ஊர்ந்து சென்றது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்றை கெனி யாப் என்பவர் டிசம்பர் 22ஆம் தேதி ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, இணையவாசிகள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

காணொளியில் ஓர் ஆணின் குரல் ‘அழகான பாம்பு’ என்று சீனத்தில் கூற, பாம்பு மிகவும் நீளமாக இருப்பதாக ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது. ‘போய்விடு’ என்று அதிர்ச்சியும் பயமும் கலந்த குரலில் ஒரு பிள்ளை கூறுவதாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகம் காணப்படும் ‘பெரடைஸ் டிரீ வகை பாம்பு இது என்று ஒருசிலர் பதிவிட்டுள்ளனர். அவ்வகை பாம்பு மிதமான நஞ்சுடையது என்றாலும் மனிதர்களை அது தாக்குவதில்லை.

இதற்கிடையே, சீன நாள்காட்டியின்படி ஜனவரி 29ஆம் தேதி பாம்பு ஆண்டு பிறக்க இருப்பதால் அதைக் குறிப்பதற்கு இந்தப் பாம்பு தோன்றியதாக வேடிக்கைப் பதிவு ஒன்றை இணையவாசி குஸ்டினி எக் பதிவிட்டார்.

இந்நிலையில், பாம்புகளைப் பார்த்தால் நிதானம் காக்குமாறு விலங்குநல குழுவான ‘ஏக்கர்ஸ்’ அதன் இணையத்தளத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்