தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரபுவழிக் கண் பிரச்சினைகளுக்குப் புதிய சேவையைத் தொடங்கும் ‘எஸ்என்இசி’

2 mins read
96188cc4-2d4e-4bf3-b497-4cd21f8ddb8f
தனது பெற்றோருடன் கண் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நான்கு வயது எலியட் கோ. அவர் ‘ஒக்குலர் ஜினெட்டிக்ஸ் சர்விஸ்‘ நிலையத்தில் சிகிச்சை பெறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரபுவழிக் கண் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோருக்கு இப்போது சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தில் (எஸ்என்இசி) புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட அது, தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய கண் சேவை நிலையமாகத் திகழ்கிறது. ‘ஒக்குலர் ஜினெட்டிக்ஸ் சர்விஸ்‘ (ஒஜிஎஸ்) என்று அழைக்கப்படும் அது, மையப்படுத்தப்பட்ட, சிறப்பான அணுகுமுறை மூலம் கண் பிரச்சினைகளைக் கண்டறிகிறது.

முன்னதாக, நோயாளிகளுக்குக் குறைவான வசதிகளே இருந்ததாக சேவை நிலையத்தின் மருத்துவ இயக்குநர் பியூ ஃபென்னர் கூறினார்.

‘‘வழக்கமான, கட்டுப்படியான மரபுவழிச் சோதனை முறை கிடைக்கும்வரை, கண்ணுக்குரிய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாமலேயே போனது. தங்கள் குழந்தைகள் உட்பட, குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பாதிக்கப்படுவார்களா என்று நோயாளிகளுக்குத் தெரியாமலேயே இருந்தது,’’ என்றார் அவர்.

மரபுவழிச் சோதனை முறை மூலம், தற்போது நோயாளிகள் துல்லியமான மரபுவழி நோய்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.

கண் மருத்துவம், மரபுவழிச் சோதனை, ஆலோசனை ஆகியவற்றில் நிபுணத்துவத்தைக் கடைப்பிடிப்பதால், ‘ஒஜிஎஸ்’ ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த மரபுவழி நோய்களைக் கண்டறியும் சேவைகளையும் சிகிச்சைத் திட்டங்களையும் வழங்குகிறது. அதோடு, அரிய வகையான மரபுவழிக் கண் நோய்களை ஆராயும் அனைத்துலக முயற்சிகளுடனும் அது சிங்கப்பூரை இணைக்கிறது.

சிங்கப்பூர் போன்ற வளர்ச்சி அடைந்திருக்கும் நாடுகளில் வேலை செய்யும் வயதுப் பிரிவினர் இடையே கண் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு மரபுவழிக் கண் நோய்கள் முக்கியக் காரணமாக இருக்கும் நிலையில், இந்தப் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ‘எஸ்என்இசி‘, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

குறிப்புச் சொற்கள்