கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 27 தட்டம்மைச் சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டன.
கடந்த வாரம் மூன்று நோயாளிகள் தட்டம்மை நோய் கண்டதாகப் பதிவு செய்யப்பட்டனர். அதனுடன், இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் வரையில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகியுள்ளது. அதையடுத்து, அந்த நோய் இங்கு அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் விவரங்களைத் தொற்றுநோய் தடுப்பு அமைப்பு (CDC) வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அதன் வாராந்தர சுகாதாரச் சஞ்சிகையில் வெளியிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டுதான் கடைசியாக இத்தனை பேருக்குத் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டது. ஆயினும் 2019ஆம் ஆண்டில் உலக அளவில் அந்நோய் பரவியதால் 152 பேருக்குத் தட்டம்மை நோய் தாக்கியதாக சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வழக்கமாக வழங்கப்பட்டுவந்த தட்டம்மைக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் தடைபட்டதால், இந்த வட்டாரத்தில் தற்போதைய தட்டம்மை தாக்குதல் ஏற்றம் அடைந்துள்ளது.
அதிகமாக மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணங்கள் செய்வதும், அம்மை அதிகரிப்புக்குக் காரணமாகும். இந்தோனீசியா, பங்ளாதேஷ் உட்பட பல நாடுகளில் தட்டம்மையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிடிஏ அமைப்பு பல பாதுகாப்புச் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.
தட்டம்மை அதிகம் உள்ள நாடுகளில் குழந்தைகள் பராமரிப்பு, சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவம் சார்ந்த இடங்களில் பணியாற்றுவோருக்கு தட்டம்மை இல்லை என்று மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகே இங்கு நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

