தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரைக் கண்டறிய சமூக ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் சண்முகம்

தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரைக் கண்டறிய சமூக ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் சண்முகம்

3 mins read
653b59c3-4020-4ea4-bbc7-c94c0238a740
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) காலை தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 81ல் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் யாராவது தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டால் அதுகுறித்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து உள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட ஐந்து இளையர்களைக் கண்டறிந்ததாகவும், சிங்கப்பூரில் தாக்குதல் நடத்துவதற்குமுன் அவர்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட 17 வயது சிங்கப்பூர் இளையர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் செப்டம்பர் மாதம் ஈராண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) காலை தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 81ல் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் கூறினார்.

‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளரான அந்த இளையர், சில மாதங்களிலேயே இணையத் தாக்கத்தினால் சிரியாவுக்குச் சென்று தாக்குதல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார். சில சவால்களைச் சந்தித்ததால் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தார்.

செப்டம்பர் பள்ளி விடுமுறை காலத்தின்போது இஸ்லாம் சமயத்தைச் சேராத ஆண்கள்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த அவர், ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தின் பக்கத்தில், தமது வீட்டின் அருகில் இருக்கும் குடியிருப்பு வட்டாரத்தில் சமையலறைக் கத்தி அல்லது கத்திரிக்கோலை வைத்து தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அந்த வட்டாரத்தில் உணவங்காடிகள், மளிகைக் கடைகள், துணைப்பாட வகுப்பு நிலையம் போன்ற வசதிகள் உள்ளன.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து அந்த 17 வயது இளையர் உட்பட, 20 வயதுக்கு உட்பட்ட 14 இளையர்களை இதுவரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கையாண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஒருவரின் கழுத்துப் பகுதியைக் கூர்மையான கத்தி அல்லது கத்திரிக்கோலை வைத்துக் குத்தினால் அது விரைவில் மரணத்தை விளைவிக்கும் என்பதற்காக அவர் கழுத்தில் குத்தும் அசைவுகளை பயிற்சி செய்ததாகவும் நம்பப்படுகிறது.

“உலகமெங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிங்கப்பூர் ஒரு பாதுகாப்பான நாடாக இருந்தாலும் நாம் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டால் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்,” என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் இதுபோன்ற சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளதாகச் சந்தேகித்தாலும் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராகப் புகார் அளிக்க விரும்ப மாட்டார்கள். அதனால், சமூக ஒத்துழைப்பு இதற்கு மிக அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

முன்கூட்டியே கண்டறியப்பட்டால் அவர்களைத் தடுத்து வைப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு சமயம் சார்ந்த ஆலோசனை வழங்கப்படும். அவர்களுக்கும், சமூகத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் அளவுக்குச் செல்லும்போதுதான் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அடிக்கடி தீவிரவாத சித்தாந்தங்கள் அடங்கியுள்ள இணையத்தளங்களை நாடுவது, சமூக ஊடகத் தளங்களில் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பது, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தீவிரவாதத்தைப் பற்றி அடிக்கடி கலந்துரையாடுவது போன்றவை ஒருவர் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.

“எனக்கு வியப்பாகவும் கவலையாகவும் உள்ளது. உலகில் பல சம்பவங்கள் நடக்கும் நிலையில், நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். சிறிய அறிகுறியாக இருந்தாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது பாதுகாப்பு அமைப்புகள் இந்தச் சம்பவத்தை முறியடித்துள்னர். பொதுமக்களுக்கும் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்