சமூக ஊடக விளம்பரங்கள் தொடர்பான மோசடிகளில் சிக்கி செப்டம்பர் மாதம் மட்டும் பாதிக்கப்பட்டோர் குறைந்தது $162,000 இழந்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 173 வழக்குகள் இந்த மோசடி தொடர்பில் பதிவாகியுள்ளன.
இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் அதிக தள்ளுபடியில் பொருள்கள் விற்பனைக் குறித்த மோசடி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறுகின்றனர் என்று காவல்துறை செப்டம்பர் 30ஆம் தேதி கூறியது.
தனிநபர் பயன்பாட்டுச் சாதனங்கள், மின்னணுப் பொருள்கள், உணவுப் பொருள்கள், தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவைப்படும் பொருள்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த மோசடி விளம்பரங்களுடன் இணைக்கப்பட்ட இணைப்பைச் சொடுக்கினால், பாதிக்கப்பட்டோர் மோசடி இணையத்தளத்திற்குச் செல்வர். வங்கி அட்டை விவரங்கள், குறிப்பிட்டத் தயாரிப்பை விநியோகம் செய்வதற்கான ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மறைச்சொல் ஆகியவற்றை உள்ளிடும்படி அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அட்டைகளிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதைக் கண்டறியும் போது அல்லது பொருள்கள் வந்துசேராத பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பொதுமக்கள் உணர்வர்.
இணைய வங்கிப் பரிவர்த்தனைகளுக்குக் குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்புகளை அமைப்பது, வங்கிகளுக்கு பல நிலைகளிலான அங்கீகாரத்தை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியது.

