சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை இழிவுபடுத்திய ஊடகப் பதிவுகளை முடக்க உத்தரவு

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை இழிவுபடுத்திய ஊடகப் பதிவுகளை முடக்க உத்தரவு

3 mins read
aaf77a03-7570-4734-8d2d-094169d0ee09
சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தையும் இன நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையில் வெளியான சமூக ஊடகப் பதிவுகளை முடக்க உத்தரவு. - படம்: உள்துறை அமைச்சு, சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தையும் பல்லினக் கலாசாரத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சென்ற மாதம் (மே) சமூக ஊடகத் தளங்களில் வெளியான 14 பதிவுகளை முடக்க உள்துறை அமைச்சும் காவல்துறையும் உத்தரவிட்டுள்ளன.

கடந்த மாதம் (மே), சிங்கப்பூர் அதன் கலாசார அடையாளம், இன அரசியல் குறித்துக் கவலை அடைவதாகச் சீன ஊடகங்களில் சில கருத்துகள் பரவத் தொடங்கின. அதன் பிறகு, சிங்கப்பூரின் கலாசாரப் பன்முகத்தன்மை குறித்து உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகளுடனும் சிங்கப்பூரை இந்தியர்கள் ஆக்கிரமித்து வருவதாகக் காட்டும் வகையிலும் இணையப் பதிவுகள் வெளிவரத் தொடங்கின.

அவற்றில் இடம்பெற்ற கருத்துகளில் பின்வருவனவும் அடங்கும்:

சிங்கப்பூரின் பல்லினக் கொள்கை, மேற்கத்திய விழுமியங்களை ஈர்ப்பதற்காகப் போடப்பட்ட போலி வேடம்;

சிங்கப்பூரின் நிலைத்தன்மைக்கு அதன் பல்லினக் கொள்கை காரணமல்ல, மாறாகப் பெரும்பான்மையாக உள்ள சீன மக்கள்தொகையே காரணம்;

சிங்கப்பூரில் இந்திய அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்கள் இந்தியக் குடியேறிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமுண்டு;

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் இந்திய அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூருக்கு அச்சுறுத்தல் என்று பதிவுகள் குறிப்பிட்டன.
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் இந்திய அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூருக்கு அச்சுறுத்தல் என்று பதிவுகள் குறிப்பிட்டன. - படம்: உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரின் கலாசாரம் அடிப்படையில் சீனக் கலாசாரத்தைக் கொண்டது; சீனாவிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளும் அதே வேளையில், அதிகரித்துவரும் இந்தியச் சமூகத்தின் அச்சுறுத்தலைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

இந்நிலையில், சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு எட்வின் டோங், சிக்லாப் சவுத் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்துக் கருத்துரைத்தார்.

“இந்தக் காணொளிகளும் பதிவுகளும் நமது பல்லினச் சமூகத்தைத் தாக்கி, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயன்றுள்ளன,” என்றார் அவர்.

“ஆனால், சிங்கப்பூரில் அனைத்துச் சமூகங்களுக்கும் சமமான முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்படுகின்றன. ஆகையால், இந்தப் பதிவுகள் நம் நாட்டின் அடிப்படையையே குறிவைத்துள்ளன எனலாம்,” என்று திரு டோங் சொன்னார்.

சம்பந்தப்பட்ட பதிவுகளை முடக்கத் தற்போது உள்துறை அமைச்சும் காவல்துறையும் கூகள், மெட்டா, எக்ஸ் தளங்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“நாம் அனுபவிக்கும் கட்டிக்காக்கும் இன நல்லிணக்கத்தை உருக்குலைக்கக்கூடிய இத்தகைய குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் வெளிநாட்டவர் பரப்புவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் இந்தப் பதிவுகளை முடக்குவதை முக்கிய முதற்கட்ட நடவடிக்கையாக எடுத்துள்ளோம்,” என்றார் திரு டோங்.

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் பதிவுகளையும் கருத்துகளையும் நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் பதிவுகளையும் கருத்துகளையும் நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதிவுகள் சீன மொழியில் இருந்தாலும் சீனாவோ வேறு எந்த நாடோ இதன் பின்னணியில் உள்ளதாகத் தற்போதைய நிலையில் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, சிங்கப்பூரின் பாதுகாப்புக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

“சிங்கப்பூரர்கள் தொடர்ந்து இணையத்தில் பார்க்கும், கேட்கும் தகவல்களைச் சரிபார்ப்பதும் நம் சமூகத்தின் ஆணிவேரைப் பாதிக்கக்கூடிய தவறான பதிவுகளைப் பகிராமல் இருப்பதும் மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் இந்தியர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வெடுக்கும் நிழற்படங்களும் பகோடா ஸ்திரீட்டில் இந்திய பக்தர்கள் ஆலயத்தில் வழிபடும் நிழற்படங்களும் இந்தப் பதிவுகளில் இணைக்கப்பட்டிருந்தன.

லிட்டில் இந்தியாவில் இந்தியர்கள் நடக்கும், ஓய்வெடுக்கும் நிழற்படங்கள் போன்றவை பதிவுகளில் பயன்படுத்தப்பட்டன.
லிட்டில் இந்தியாவில் இந்தியர்கள் நடக்கும், ஓய்வெடுக்கும் நிழற்படங்கள் போன்றவை பதிவுகளில் பயன்படுத்தப்பட்டன. - படம்: உள்துறை அமைச்சு, சிங்கப்பூர்க் காவல்துறை

மேலும், சிங்கப்பூரிலுள்ள இந்தியச் சமூகத்தைக் குறிப்பிடுவதற்கு இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளும் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன; எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் ‘கெட்டியான கறிக்குழம்பு’டன் பதிவுகள் ஒப்பிட்டிருந்தன.

முதற்கட்ட விசாரணையில் இப்பதிவுகள் சீனாவைச் சேர்ந்த சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்பட்டு, பின்னர் மற்றத் தளங்களில் பதிவேற்றம் கண்டிருக்கக்கூடும் எனக் காவல்துறையும் உள்துறை அமைச்சும் தெரிவித்தன.

இப்பதிவுகள் சிங்கப்பூரில் உள்ள இந்தியச் சமூகத்திற்கு எதிராகத் தீய உணர்வுகளைத் தூண்டி, பிரிவினையை விதைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீங்கிழைக்கும் முயற்சிகள் என்றும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் டோங் சொன்னார்.

“வெளிப்புறச் சக்திகள் உட்பட நமது சமூகப் பிணைப்புக்கும் இன நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை அரசாங்கம் தீவிரமாகக் கருதுகிறது. மேலும் அத்தகைய மிரட்டல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை அது எடுக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்