சிங்கப்பூரில் அடையாள அரசியலுக்கான இடம் இல்லை. சிங்கப்பூரின் அரசியலுடன் சமயம் கலக்கப்படக்கூடாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியதை உள்ளூர்ச் சமய, சமூகத் தலைவர்கள் ஆதரித்துக் குரல்கொடுத்துள்ளனர்.
இன, சமய வேறுபாடுகளைச் சில தரப்பினர் தங்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் சாதகமாகப் பயன்படுத்தப்படும் முயற்சிகள் குறித்து கவலைப்படுவதாகச் சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தெரிவித்தது.
முஸ்லிம் சமூகத்தினரின் உறுப்பு அமைப்பு என்ற முறையில், இன, சமய நல்லிணக்கத்தைச் சிங்கப்பூரர்கள் முதன்மைப்படுத்தவேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
“சிங்கப்பூரர்கள் அனைவரையும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க எந்த முயற்சி வந்தாலும் அதனை நிராகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜ் முஹம்மது தெரிவித்தார்.
“சமயத்திற்கும் அரசியலுக்கும் இடையே தெளிவான ரேகையை நாம் வரையவேண்டும். சமயம் என்பது மிகவும் தனிப்பட்டது, புனிதமானது. அரசியல் போட்டிக்களத்திற்குள் அது இழுக்கப்படும்போது தவறான புரிதலும் பிளவுகளும் ஏற்படும் அபாயம் கூடுகிறதுசமயத்தை அரசியலாக்கும்போது எவரும் வெல்வதில்லை. பல தலைமுறைகளாக வளர்க்கப்படும் நம்பிக்கைதான் பாழாகிறது,” என்று சமய நல்லிணக்க நிபுணர் நஸ்ஹத் ஃபஹிமா தெரிவித்தார்.
“ஒரு நாட்டின் தேர்தலும் அதன் முடிவுகளும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியவை. எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடும் இருக்கக் கூடாது. அதையும் தாண்டி, குறிப்பாக இனமும் சமயமும் அரசியலில் கலப்பது நம் மக்களின் ஒற்றுமையை பாதிப்பதோடு, எதிர்காலத்தில் பிளவுபட்ட சிங்கப்பூரை உருவாக்கும்,” என்றார் இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் க. செங்குட்டுவன்.
எல்லா இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள், தொடர்ந்து ஒற்றுமையையும் நிதானத்தையும் நிலைநாட்டும்படி சிங்கப்பூர் பெளத்த சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமரின் கருத்துகளுடன் ஒத்துப்போவதாகக் கூறிய மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் க. ரவீந்திரன், சிங்கப்பூரின் சமய, கலாசாரப் பன்முகத்தன்மையைக் கட்டிக்காப்பது முக்கியம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“சமூக நடவடிக்கைகளின் வழி பிணைப்புகளை அதிகப்படுத்து முடியும். இதனால், நாட்டை வசப்படுத்த நினைக்கும் வெளிநாட்டுத் தரப்புகளிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்,” என்று திரு ரவீந்திரன் கூறினார்